கொட்டிய மழை… கொட்டும் நிஜம்!

மிழகத்தில் தொடர்ந்து கனமழையால் ஏற்பட்ட அவலங்களுக்கு யார் காரணம் என ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. தமிழகத்தில் 1967 முதல் இன்று வரை திமுக, அதிமுக என இந்த இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இன்றைய சீர்கேட்டுக்கு இந்த இரண்டு கட்சிகளுமே தான் காரணம். இரண்டுமே அடுத்த தேர்தலை மையமாக வைத்து இலவசங்களை வாரி இறைத்தார்களேத் தவிர அடுத்த தலைமுறை பற்றிக் கவலைப்படவில்லை. தொலைநோக்குப் பார்வையில் எந்தத் திட்டங்களுமே தீட்டப்படவில்லை. இதுதான் உண்மை. இன்றைய அவலநிலைக்கு இதுதான் காரணம்.

இருந்தபோதும் தமிழக அரசு தனது முழு சக்தியைத் திரட்டி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு உதவியாக மத்திய அரசும் முப்படைகளை அனுப்பி வைத்துள்ளது. பிரதமரும் முதல்வரும் தனித்தனியாக ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். பிரதமர் ஏற்கனவே அனுப்பிய 940 கோடியுடன் மேலும் 1,000 கோடி ரூபாய் அளித்துள்ளார். மேலும் அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இத்தகைய சோதனை நிறைந்த நேரங்களில் ஊடகங்கள் மேலும் மேலும் பீதிகளை உருவாக்காமல் நம்பிக்கைதரும் செய்திகளை வெளியிட வேண்டும். ‘தினத்தந்தி’ தனது தலையங்கத்தில் பிரதமரும் முதல் அமைச்சரும் பார்த்தது நம்பிக்கை ஊட்டுகிறது” என்று தலையங்கத்தில் எழுதியுள்ளது. இதற்கு நேர்மாறாக சென்னை ‘தினமலர்’, மேலிருந்து பார்த்தால் எங்கள் அவதி தெரியுமா மேடம்?” என முதலமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்ததை கிண்டல் செய்துள்ளது. ஆளும் கட்சி மீதுள்ள வெறுப்பைக் காட்டுவதற்கு இது நேரமல்ல.

சில இடங்களில் சமூக விரோதிகள் ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இவர்களை உடனடியாகப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து அவர்களுக்கு தக்க ‘சன்மானம்’ வாங்கிக் கொடுத்தால் மட்டுமே புத்தி வரும்.

ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி, ராமகிருஷ்ணா மிஷன் போன்ற எண்ணற்ற தொண்டு அமைப்புகள் ஏராளமான நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றன. ஏழைகளுக்காகவே கண்ணீர் வடிக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களையோ, அவர்களின் கூட்டாளிகளான வை.கோ., சீமான், திருமாவளவன், இளங்கோவன் போன்றவர்களையோ நிவாரணப் பணிகளில் பார்க்க முடியவில்லை. பாவம், அவர்களுக்கு அடுத்த சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் ஏராளமாக இருக்கிறதோ என்னவோ…!