கொடை வள்ளல்

ஒருநாள் அர்ஜுனனுக்கு ‘நம்முடைய சகோதரர் தர்மன் அனைவருக்குமே கொடை வழங்குகிறார். அவர் பெயரே தர்மன்தான். ஆனால், கர்ணனை மட்டும் கொடைவள்ளல் என உலகம் கொண்டாடுகிறதே எப்படி?’ என்று சந்தேகம் ஏற்பட்டது. தனது சந்தேகத்தை கிருஷ்ண
ரிடம் அர்ஜுனன் வினவினான்.

கிருஷ்ணர், சிரித்துக்கொண்டே, “சரி அர்ஜுனா. உன் சந்தேகத்தை ஒரு சோதனை மூலம் கண்டறியலாம்” என்றார். கிருஷ்ணர், தன் சக்தியால் தொடர்ச்சியாக மழையைப் பொழியச் செய்தார். சில நாள்களுக்குப் பிறகு கிருஷ்ணரும், அர்ஜுனனும் வறியவர்கள் போல வேடமிட்டு தர்மனுடைய அரண்மனைக்குச் சென்றனர். அரசவையில் தர்மன் ‘உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “எங்கள் வீட்டில் உணவு சமைக்கத் தேவையான பொருள்கள் இருக்கின்றன. ஆனால் விறகுகள் நனைந்துவிட்டதால் அவற்றைச் சமைப்பதற்குத் விறகுகள் தேவை என்றார்.

அதைக் கேட்ட தர்மன் “பொன், பொருள் என்னால் உடனே தந்து விட முடியும். ஆனால் நீங்கள் நான் தர இயலாதது. இந்த அரண்மனையில் உள்ளோருக்குச் சமைக்க தேவையான விறகுகள் மட்டுமே இங்கு இருக்கின்றன, நீங்கள் வேண்டுமென்றால் இங்கு வந்து விருந்துண்ணலாம் என்றார்.

பிறகு வருவதாகக் கூறி அர்ஜுனனும், கிருஷ்ணனும் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அடுத்ததாக கர்ணனிடம் சென்று இதையே கேட்டனர். உடனே கர்ணன் சற்றும் யோசிக்காமல் தன் அரண்மனையில் உள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் உடைந்து, அவற்றைக் கொண்டு வந்து கிருஷ்ணரிடம் கொடுத்து, ‘இதைப் பயன்படுத்தி உணவு சமையுங்கள்’ என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்.

கிருஷ்ணர் புன்னகையுடன் அர்ஜுனனைப் பார்த்தார். அர்ஜுனன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். உண்மையிலேயே கர்ணன்தான் கொடைவள்ளல் என்பதை அர்ஜுனனும் ஒப்புக்கொண்டான்.

நம்மிடம் இருப்பதை அளிப்பதை விட, ஒருவருக்குத் தேவையானதை அளிப்பதே சிறந்த தானம்