நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை கூட்டுறவுத் துறையில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் நாட்டை வலுப்படுத்தும் இலக்குடன் செயல்பட்டு வரும் சஹகார் பாரதி பற்றி அறிவோம்…
மும்பையில், 1978 ஆம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி நிறுவப்பட்ட சஹகார் பாரதி, பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும் வியாபித்து வருகிறது. புனேவில் பிறந்து இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சமூகத் தொண்டாற்றி வந்த லட்சுமணராவ் இனாம்தார் பணியாற்றி வடிவமைத்த அமைப்பே சஹகார் பாரதி. இவ்வமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சதீஷ்ஜி மராட்டே, தற்போது மத்திய அரசு நிறுவனங்களான நபார்டு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் இயக்குநர்.
சஹகார் பாரதியின் நோக்கம்
பொதுமக்களிடையே கூட்டுறவு மனப்பான்மையை உருவாக்கி, கூட்டுப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு, வேகமான மற்றும் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு, கூட்டுறவின் பங்கு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அமைப்பின் நோக்கமாகும்.
தேசம் முழுவதும் கூட்டுறவு அமைப்புகளுக்குள் செயல்பட்டு பழங்குடியினர், சிறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள், கிராமப்புற கைவினைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை சேர்ந்த நுகர்வோரின் மேம்பாட்டிற்கு, கூட்டுறவு இயக்கம் மிக முக்கியப் பங்காற்றும் என்பதை உணர்ந்து, அதற்கான களப்பணிகளை சஹகார் பாரதி முழுமூச்சாக மேற்கொண்டு வருகிறது.
அடித்தட்டு மக்கள், விவசாயிகள், பெண்கள் என சமூகத்தின் பல தரப்பினருக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கான வழிகளை திட்டங்களாக்கி, அதை மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்துவதற்கு நமது அமைப்பின் முன்னோடி தலைவர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசின் கூட்டுறவுத்துறையில் கொண்டுவரப்படும் திட்டங்கள், கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கும் பணியையும் நமது அமைப்பு மேற்கொள்கிறது.
தமிழகத்தில்…
தமிழகத் தலைவராக சுபாஷ் கணபதி, பொதுச் செயலாளராக பிரகாசம், அமைப்பு பொதுச்செயலாளராக ரவிகுல திலகம் மற்றும் பல மாநில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 23 மாவட்டங்களில் மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுளதோடு, ஏனைய மாவட்டங்களில் மாவட்ட குழுக்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக தேர்வான நிர்வாகிகள் மூலம் நமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி திட்டங்கள், பட்டறைகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் என பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
மாநில அரசின் கீழ் உள்ள கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்திக்குழுக்கள், மீனவர், பால், நெசவு, தொடக்க வேளாண்மை என பல பிரிவு சார்ந்த கூட்டுறவு அமைப்புகள், அதன் நிர்வாகிகள் நமது அமைப்பின் அங்கமாக மாறி வருகின்றனர். தேசியத் தலைமையின் வழிகாட்டுதலும், மாநில தலைமையில் விவேகமான செயல்பாடும், விரைவில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் சஹகார் பாரதியின் பங்கு இன்றியமையாத ஒன்று என குறிப்பிடும் அளவிற்கு, நாடு முழுவதும் 29 மாநிலங்கள், 250 மாவட்டங்களில் வேகமாக வீறுநடை போட்டு வருகிறது.
சரித்திர சாதனை
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக்குழுவை கலைத்து விட்டு, தங்களுக்கு சாதகமான நிர்வாகக்குழுவை அமைக்கும் நோக்கில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சித்தபோது, அதை நமது அமைப்பு எதிர்த்ததோடு, ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் விளைவாக, தமிழக அரசின் கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார். கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் விரைந்து நடத்தப்பட கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத் திட்டம்
அடுத்து வரும் கூட்டுறவு சங்கத் தேர்தலில், மாவட்டந்தோறும் தலா பத்து கூட்டுறவு சங்கங்களில், நமது அமைப்பின் சார்பில் போட்டியிடுவோர் வெற்றி பெறும் வகையிலும், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களை இணைக்கவும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு சென்று சேரவும் உறுதியேற்று செயல்பட்டு வருகிறது.
பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள்:
வங்கிகளில் பணம் வைப்பு செய்தவர்களுக்கு, வங்கி மூடப்பட்டால் முன்பு ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீட்டு பாதுகாப்பு இருந்தது. சஹகார் பாரதியின் தொடர் முயற்சியால், இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
கூட்டுறவு சங்கங்கள் 30% வருமான வரி செலுத்த வேண்டியிருந்தது, இது 22% ஆகக் குறைக்கப்பட்டது.
கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் கூட்டுறவு துறை இரண்டின் கட்டுப்பாடும் இருந்தது. 1949 வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டதால், தற்போது முழுக்கட்டுப்பாடும் ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.
நகர கூட்டுறவு வங்கிகளின் நிலையை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி சிறப்பு குழுவை அமைத்தது. சஹகார் பாரதி விரிவான அறிக்கை அளித்தது. தடை செய்யப்பட்ட வங்கிகளில் வைப்பு செய்தவர்களுக்கு, 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வழங்கும் மசோதா 2020ல் சட்டமாகியது. மத்திய அரசு தனி “கூட்டுறவு அமைச்சகம்” உருவாக்கியது. முதல் அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டார்.
பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தைப்படுத்தல் உதவியாக “Simply Desi” என்ற பல மாநில கூட்டுறவு அமைப்பு தொடங்கப்பட்டது.
நாட்டின் மூன்று அடுக்கு கடன் அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு நினைவுப்பத்திரம் வழங்கப்பட்டது.
NAFCUB, NCUI, தேசிய மீன்வள மேம்பாட்டு கூட்டமைப்பு போன்ற தேசிய அமைப்புகளில் சஹகார் பாரதி பிரதிநிதிகள் இடம் பெற்றனர்.
“சஹகார் சுகந்த்” (மராத்தி, இந்தி) மற்றும் “சஹகார் சேதனா” (குஜராத்தி) இதழ்கள் வெளியிடப்படுகின்றன.
மகாராஷ்டிராவில் “சஹகார் பாரதி கூட்டுறவு பயிற்சி நிறுவனம்” தொடங்கப்பட்டு, பல துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் நகர கடன் சங்கங்கள் நிறுவப்பட்டு, 10 இடங்களில் வெற்றி பெற்றது.
கொரோனா காலத்தில் குஜராத்தில் 5% வட்டியில் ரூ.5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டது.
கேரளாவில் “அக்ஷய ஸ்ரீ” மற்றும் “கிராம சம்ருத்தி ஸ்டோர்” மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டது.
ராஜஸ்தானில் திருவிழாக்களில் கூட்டுறவு முறையில் இனிப்பு உற்பத்தி, விநியோகம் செய்யப்பட்டது.
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், பெண்கள் சுயஉதவி குழுக்கள் வலுப்படுத்தப்பட்டன.
மேற்கு வங்காளத்தில் கடன் சங்கங்கள் மற்றும் பல மாநில கூட்டுறவு அமைப்புகள் தொடங்கப்பட்டன.
2015 முதல் மத்திய நிதி அமைச்சருடன், முன் பட்ஜெட் ஆலோசனைகள் நடைபெற்றன.
கர்நாடகாவில் கிராம மற்றும் பால் கூட்டுறவு துறையில் முன்னணி பங்கு வகித்தது. “கேம்கோ” மூலம் சுயநாட்டு சாக்லேட் மாற்று தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றது.
ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடன் சங்கங்கள் விரிவுபடுத்தப்பட்டன.
நிதி ஆயோக் மற்றும் சஹகார் பாரதி இணைந்து டெல்லியில் கருத்தரங்கம் நடத்தியது.
மத்திய அரசின் முயற்சியால் 10,000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 8,000 அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேமிப்பு, செயலாக்கம் மற்றும் நியாயமான விலை பெறுதல் எளிதாகியுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற அமுல் பால் கூட்டுறவு நிகழ்ச்சியில், இந்திய பால் கூட்டுறவு உலகத் தரமான பிராண்டாக இருப்பதை வலியுறுத்தி, மத்திய அரசு ஊக்குவிப்பை உறுதி செய்தது.
23 ஜனவரி 2023 அன்று, “தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில்” (NPC) மற்றும் சஹகார் பாரதி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வெளியீடு, விழிப்புணர்வு, திட்ட மேலாண்மை, கொள்கை ஆலோசனை போன்ற துறைகளில் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா, நகர கூட்டுறவு வங்கிகளுக்கான Umbrella Organisation (NUCFDC) தொடக்க விழாவை நடத்தியது. இது சிறிய வங்கிகளுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்து, சவால்களை சமாளிக்க உதவும். இதன் மூலம் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
உலகின் மிகப்பெரிய “அன்ன சேமிப்பு திட்டம்” கூட்டுறவு மூலம் தொடங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான களஞ்சியங்கள் (Warehouses) அமைக்கப்பட்டு, 11 மாநிலங்களில், 11 PACS களஞ்சியங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு நவீன சேமிப்பு வசதி கிடைக்கும்.
கட்டுரையாளர்: தமிழ்நாடு மாநில செயலாளர், சஹகார் பாரதி