“கூட்டணி தர்மத்தை சமாஜ்வாதி பின்பற்றவில்லை” – உ.பி காங்கிரஸ் பொறுப்பாளர் குற்றச்சாட்டு

சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை. கூட்டணி விஷயத்தில் சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமாஜ்வாதி கட்சி நேற்று வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகளில் பல தொகுதிகள் காங்கிரஸ் கட்சி கேட்ககக் கூடியவை. சமாஜ்வாதி கட்சியின் செயல் மிகவும் ஆபத்தானது. சமாஜ்வாதி கட்சி எந்த தகவலையும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறதோ அங்கெல்லாம் கூட்டணி தர்மத்தை பின்பற்றுகிறது.
சமாஜ்வாதி கட்சி எங்களுக்கு இடங்களை ஒதுக்குவதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. நாங்கள் தேசிய கட்சி. எனவே, தொகுதிப் பங்கீடு விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். அதன் பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் வலிமையான கட்சி. சில சிக்கல்கள் இருக்கலாம். ஆனாலும், நாங்கள் மிகப் பெரிய சக்தியாக வர இருக்கிறோம். கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி தனது 100 சதவீத ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. ஆனால், சமாஜ்வாதி கட்சி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக இருந்தால், நாங்கள் அதற்கேற்ப முடிவுகளை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? – உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 11, ஆர்எல்டி கட்சிக்கு 7, சிறிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளை சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளது. இந்தச் சூழலில் 16 வேட்பாளர்கள் அடங்கிய சமாஜ்வாதியின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அவர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் இந்த நடவடிக்கை காரணமாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ள 11 தொகுதிகளை ஏற்பதாக காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. அக்கட்சி 13 தொகுதிகளில் போட்டியிட தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அதன் பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.