குற்றவியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்: ஹைதராபாத்தில் அமித் ஷா தகவல்

 குற்றவியல் சட்ட திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக ஹைதராபாத் வந்தார். அப்போது அவர் ஹைதராபாத் தேசிய போலீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த 175 பேரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதில் 14 பேர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பின்னர் விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: புதுவிதமான பல குற்றங்கள் நமக்கு சவால் அளித்து வருகின்றன. ஆதலால் குற்றவியல் சட்டதிருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நம் நாட்டுக்கு கிடைத்துள்ளது. கிரிப்டோ கரன்ஸி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த சிலர் சதி செய்கின்றனர். ஹவாலா, கள்ள நோட்டு விவகாரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வது அவசியம்.

ஆங்கிலேயர் காலத்து 3 சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. சிஆர்பிசி, ஐபிசி மற்றும் எவிடென்ஸ் சட்டங்களில் இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம். விரைவில் இந்த 3 பிரிவுகளிலும் சட்ட திருத்தங்கள் செய்து ஒப்புதல் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த புதிய சட்ட திருத்தங்கள் மூலம் மக்களை அதிகாரிகளாகிய நீங்கள் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார். பின்னர் தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

கே.டி. ராமாராவை முதல்வராக்க வேண்டுமென சந்திரசேகர ராவும், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டுமென சோனியா காந்தியும் நினைக்கின்றனர். இவர்களுக்கு இவர்களின் குடும்ப நலனே முக்கியம். வாரிசுகளை பதவியில் உட்கார வைப்பதே பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் உள்ள ஒரே குறிக்கோள். ஆனால் பாஜக மட்டுமே ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது. பிஆர்எஸ் கட்சி, ஏழைகளுக்கு எதிரான கட்சி. தலித்துகளுக்கு எதிரான கட்சி. இம்முறை பிஆர்எஸ் வெற்றி பெற்றால் தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குமா?

ஏனெனில் முதன் முறை நடைபெற்ற தெலங்கானா தேர்தலில் அப்போதைய டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றால் தலித் தான் முதல்வர் என சந்திரசேகர ராவ் அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் அவரே 2 முறை முதல்வராக இருந்தார். தலித் மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் கோடி என்னவானது என முதல்வர் சந்திரசேகர ராவ் கூற வேண்டும். ரூ.10 ஆயிரம் கோடியில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நல திட்டங்கள் என அறிவித்தார். அது என்னவானது என கூற வேண்டும்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை அறிவித்து அமல்படுத்தினார். பி.சி. நல வாரியத்தை பிரதமர் மோடி அமைத்தார். சம்மக்கா-சாரக்கா பெயரில் மொலுகு மாவட்டத்தில் கிரிஜன பல்கலைக்கழகம் அமைக்க உள்ளோம். மஞ்சள் வாரியம் ஏற்பாடு செய்கிறோம். கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம் அமைத்தோம். பாஜக இம்முறை தெலங்கானாவில் வெற்றி பெற்றால் பி.சி. பிரிவை சேர்ந்தவர்தான் முதல்வராவார். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.