குண்டுவெடிப்பு மிரட்டல்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் ஜூன் 7ம் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்படும் என்ற மிரட்டல் விடுக்கப்பட்ட ஆறு கடிதங்கள் வந்ததையடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கடிதங்கள் தனித்தனியாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை எஸ்.எஸ்.பி குர்னீத் சிங் தெரிவித்தார். கொய்லா ரயில் நிலையம், ஆதேஷ் மருத்துவமனை, மினி செயலகத்தில் உள்ள எஸ்.எஸ்.பி அலுவலகம், பதிண்டா சிறை, ஐ.டி.ஐ மேம்பாலம், மிட்டல் மால், புதிய கார் பார்க்கிங், நிரங்காரி பவன் மற்றும் விவசாயிகள் போராட்ட இடம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தப்படும் என இடங்களின் பெயர்களுடன் அந்த கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்திய அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு ஒரு டிரெய்லர் மட்டுமே. கடவுளால் மட்டுமே பதிண்டாவைக் காப்பாற்ற முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சோதனை நடத்தவும் வாகனங்களை சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் எழுதியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மக்கள், சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதாவது ஒன்றைக் கண்டால் உடனடியாக காவலர்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளனர் என்று எஸ்.எ.ஸ்பி குர்னீத் சிங் தெரிவித்தார். முன்னதாக, கடந்த மே 8 அன்று, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஹெரிடேஜ் தெரு, குரு ராம்தாஸ் ஜி நிவாஸ் கட்டடத்தின் பின்புறம் உள்ளிட்ட இடங்களில் மூன்று முறை குறைந்த தீவிரம் கொண்ட மர்மமான குண்டுவெடிப்பு நிகழ்ந்தது நினைவு கூரத்தக்கது.