”குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அனைத்து பாகிஸ்தானியருக்கும் குடியுரிமை அளிப்போம் என, அவர்களால் அறிவிக்க முடியுமா?” என, பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.’இது முஸ்லிம்களுக்கு எதிரானது’ என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் நடத்திய டில்லி ஜாமியா பல்கலை மாணவர்களை, போலீசார் தாக்கியதாக பிரச்னை வெடித்தது. இதனால், நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, காங்., பொய் செய்திகளை பரப்பி வருகிறது. முஸ்லிம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திட முயற்சி நடக்கிறது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது; யாருடைய உரிமையும் பறிக்கப்படாது. இதற்கான உறுதியை நான் அளிக்கிறேன்.
ஆனால், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அரசியல் பலன் பெறுவதற்காக மக்களை துாண்டிவிடுகின்றன. பொய் தகவல்களை பரப்பி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்து கின்றன. காங்., மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு நான் சவால் விடுக்கிறேன். ‘அனைத்து பாகிஸ்தானியருக்கும் குடியுரிமை அளிப்போம். ஜம்மு – காஷ்மீரில் மீண்டும், சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது பிரிவை செயல்படுத்துவோம்’ என, உங்களால் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?
மறைமுகமாக தாக்குதல் நடத்தும் இந்த கொரில்லா அரசியலை, காங்., உள்ளிட்ட கட்சிகள் நிறுத்த வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியல் சாசனம் நமக்கெல்லாம் புனிதமானது. அரசின் கொள்கைகள் குறித்து விவாதியுங்கள், ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடுங்கள். உங்களுடைய கோரிக்கைகள், பேச்சுகளுக்கு காது கொடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால், சில அரசியல் கட்சிகள், உங்கள் தோளின் மீது ஏறி, உங்களை ஏவிவிடுவதை உணர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.