குடியுரிமைச் சட்டம் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – எதிர்கட்சிகளுக்கு அமித் ஷா பதிலடி

குடியுரிமைச் சட்டம் நாட்டில் உறுதியாக அமலாகும். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் 12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முறையிட்டுள்ள நிலையில், அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

”மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்டம் சிறுபான்மையினருக்கு ஒருபோதும் எதிரானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் இந்தச் சட்டத்தை நாங்கள் திரும்பப் பெறமாட்டோம். அந்தப் பேச்சுக்கே இடமில்லை. நிச்சயம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீர்மானமாக இருக்கிறது. இந்தச் சட்டம் அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளது.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம். ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மசோதாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மையில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதுகாக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதைத் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றன. வீரசாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தவறாகப் பேசுகிறார். நிச்சயம் சாவர்க்கரைப் போல் ராகுல் காந்தியால் வர முடியாது”. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.