காவி வந்தது மாற்றம் தந்தது

நானும் அப்போது கம்யூனிஸ்டு தான்… என்னோட சின்ன வயதில் எங்க ஊர் மட்டுமல்ல எங்கள்  திருவாரூர் மாவட்டம் முழுவதுமே அத்தனை கிராமங்களிலும் கம்யூனிஸ்டு கொடி மட்டும் தான் பறக்கும். வேறு கொடி பறப்பதை பார்க்கவே முடியாது…

30 வருடத்திற்கு முன் என் அப்பா எங்கள் பகுதியின் கம்யூனிஸ்டு கட்சியின் பிரபலமான தலைவர். கூத்தாநல்லூரில் எங்க வார்டு கவுன்ஸிராக இருந்தார்.  என் குடும்பமும் என் சோந்தபந்தங்கள் அத்தனை பேரும் கம்யூனிஸ்டுகள் தான்.எங்கள் மாவட்டத்தில் என் மிக நெருங்கிய உறவினர்கள் தான் கம்யூனிஸ்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்தனர் (இப்போதும் என் நெருங்கிய உறவினர்கள் தான் மாவட்டத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்).

எங்க ஏரியா முழுக்க சிவப்பு துண்டு போட்ட ஆளுங்களை தான் பார்க்க முடியும்.. வாரம் ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம்னு ஏதாவது நடத்தி ‘தோழரே தோழரே’னு ஊரை எப்பவும் பரபரப்பா வச்சிருப்பாங்க. ஒரு போராட்டம், பொதுக்கூட்டம்னா சுற்றி உள்ள கிராமங்கள் அத்தனையும் வேலைநிறுத்தம் செது ஆண், பெண், குழந்தை குட்டிகளோடு நிகழ்ச்சியில் இருக்கணும்; இது கட்டாயம். நானும் கையில் கொடி பிடித்து ‘செங்கொடி வாழ்க’னு கோஷம் போட்டுக்கொண்டு போயிருக்கேன்.. நிதியளிப்பு கூட்டங்கள் நடத்துவார்கள் ஒவ்வொரு குடும்பமும் கட்சி குறிப்பிடுகின்ற அளவு நெல் கட்டாயமாக கொடுத்தே ஆகணும். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளைக் கொண்டுவந்து நிதியளிப்பு கூட்டத்தில் கொடுப்பார்கள் ஒவ்வொரு பகுதியிருந்தும் நூற்றுக்கணக்கான மூட்டைகள் நெல் கிடைக்கும்.

கம்யூனிஸ்டுகளை மீறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அவ்வளவு சர்வாதிகாரம்.

என் ஊரில் ஷாகா ஆரம்பித்த புதிதில் இந்த அனுபவம் கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கும் இருந்தது. இருபது வருடத்தில் எங்கள் பகுதியிலும் கிராமங்களிலும் எவ்வளவு மாற்றங்கள்.

அங்கிங்கெனாதபடி எங்கும் பறந்த கம்யூனிஸ்டு கொடியை இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமா தான் பார்க்க முடிகிறது. இப்போது எல்லா ஊரிலும் பா.ஜ.க கொடியோ ஹிந்து முன்னணி கொடியோ பறக்கிறது. எங்கும் சிவப்பு துண்டு தோழர்கள் திரிந்த எங்கள் பகுதியில் இப்போது எங்கும் காவித்துண்டு ‘ஜி’க்களா மாறிப் போனார்கள். காலத்தின் மாற்றமும் ஓட்டமும் நல்லதை நோக்கியே செல்கிறது.