காளியும் காளிதாசனும்

மகாகவி காளிதாசர், தண்டி, பவபூதி மூவருமே மன்னர் போஜராஜனின் அரசவை புலவர்கள்.

மூவருமே பார் போற்றும் கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம் இவர்கள் மூவரில் யாருடைய புலமை உயர்ந்தது என்ற வாதம் ஏற்பட்டது. போட்டியும் நடந்தது.

ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் புலமையை வெளிப்படுத்தினர். தீர்ப்பு சொல்ல முடியாத இது போன்ற இக்கட்டான சூழலில் தெய்வ சந்நிதியில் தீர்ப்பு கேட்பது வழக்கம்.

அரசரும், புலவர்களும் காளிதேவியின் சந்நிதிக்கு வந்தனர். தாயிடம் தீர்ப்பு கேட்டனர்.
‘தண்டியின் கவிதையில் ரசனை அதிகம், பவபூதியின் கவிதைகள் அறிவுபூர்வமானவை’ என காளி தீர்ப்பளித்தாள்.

காளிதேவி தன்னை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என மனம் நொந்த காளிதாசர் ‘அப்படியானால் என் திறமை என்னடி?’ என கோபமாக ஒருமையில் காளியை திட்டிவிட்டார்.

‘அவசரப்பட்டுவிட்டாயே மகனே காளிதாசா, நான் மற்றவர்கள் பாண்டித்தியம் பற்றியே மெச்சினேன். ஆனால் ‘த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சயே’ என்று உன்னைப் பற்றி சொல்வதற்குள் என்ன அவசரம் உனக்கு என அன்பாக கேட்டாள் தாய் காளி.
இதை கேட்டதும் அழுதே விட்டார் காளிதாசன். தாய் காளிதேவி சொன்னதன் பொருள் ‘நீதானே நான் நீதானே நான் நீதானே நான்’. நீயும் நானும் ஒன்றான பிறகு உனக்கு மிஞ்சிய புலவனேது என்றாள் தாய் காளி.
கருணைக்கடலான அந்த தேவியை இந்த நவராத்திரியில் வணங்கி அருள் பெறுவோம், வாழ்வில் நலம் பெறுவோம்.