காங்., ஊழலை அம்பலப்படுத்தியதால் என் மீது விமர்சனம்: மோடி குற்றச்சாட்டு

‛‛ காங்கிரஸ் செய்த கோடிக்கணக்கான ஊழலை அம்பலப்படுத்தியதால், அக்கட்சி என்னை விமர்சனம் செய்கிறது ” என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

தெலுங்கானா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடந்த பேரணியில் பேசியதாவது: இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும். இது ‛கியாரண்ட்டி’. ஒட்டு மொத்த உலகிற்கும், இன்றைய இந்தியா நம்பிக்கை ஒளியாக விளங்குகிறது. புதிய சாதனைகளை படைக்கிறது.

காங்கிரஸ் செய்த பல்லாயிரம் கோடி அளவு ஊழலை அம்பலப்படுத்தியதால் தான் அக்கட்சி என்னையும், எனது குடும்பத்தையும் ( மக்களை) விமர்சிக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்தது இல்லை. ஆனால், வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வருகிறேன். காஷ்மீர் முதல் தமிழகம் வரை, குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் சீரழிந்துள்ளன. வாரிசு அரசியல் கட்சிகள், திறமைசாலிகளையும், இளைஞர்களையும் எதிர்க்கின்றன. இளைய தலைவர்களை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் அச்சப்படுகிறது. ஆனால், 75 முதல் 85 வயதானவர்களை கட்சி தலைமை பதவிக்கு கொண்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். முன்னதாக, செகந்திராபாத்தில் உள்ள மகாகாளி கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்