காங்கிரஸ் பிழைகளை சரி செய்கிறார் பிரதமர் – ஸ்மிருதி இரானி

”குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. காங்., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரிசெய்து வருகிறார்,” என, மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, மதுரையில், பா.ஜ., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்ததே, மன்மோகன் சிங் தலைமையிலான காங்., ஆட்சியில் தான். அதை, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாக பேசி, தேச பாதுகாப்பிற்கு எதிராக கல்லெறிந்த, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கக்கூடாது என்ற அரசாணை வெளியானபோது ஏன் எதிர்க்கவில்லை.

நாட்டை கொள்ளையடிக்கும் பணியை, தி.மு.க.,வுக்கு மன்மோகன் சிங் ஆட்சியில் வாய்ப்பு கொடுத்ததால் அக்கட்சி பேசவில்லை. ஆனால் இப்போது, தி.மு.க., கொதிக்கிறது.தி.மு.க.,வுக்கு எப்போதும், ஹிந்துக்கள் மீது நம்பிக்கை இல்லை. காங்கிரசுக்கு சீக்கியர்கள் மீது நம்பிக்கை இல்லை.

தற்போது, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதையும் ஏன் இரு கட்சிகளும் எதிர்க்க வேண்டும்.டில்லி பல்கலையில் மாணவர் போராட்டத்தை துாண்டி விட்டது, காங்கிரஸ் தான்.ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது.அந்த வரிசையில், குடியுரிமை திருத்த சட்டத்தாலும், நாடு முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சியில் நடந்த பல்வேறு வரலாற்று பிழைகளை, தற்போது பிரதமர் மோடி சரி செய்கிறார்; இது தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.