‘கல்வி’ என்பது ஒரு பெரிய கடல்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஜயபாரதம் கல்வி மலர் உங்கள் கைகளில் தவழ்கிறது. ‘கல்வி’ என்பது ஒரு பெரிய கடல். அதில் ஒரு சிறு துளி இது. 

உணவு, கல்வி, மருத்துவம் இந்த மூன்றையும் விற்கக்கூடாது என்பது நமது நாட்டின் பண்பாடு. ஆனால் எதை வியாபாரம் செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் கருதினார்களோ அதுவே இன்றைக்கு மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையிலும் கூட தமிழகம் முழுவதும் வியாபார நோக்கு இல்லாமல் ஏராளமான கல்வி நிறுவனங்களை பலர் நடத்தி வருகின்றனர். அவர்களை நாம் பாராட்டுவோம்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அரசின் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு கிறிஸ்தவ மிஷனரிகள் ஏராளமான பள்ளி, கல்லூரிகளை நிறுவினார்கள். அவர்கள் நடத்தி வருகின்ற கல்வி நிறுவனங்கள் அனைத்துமே கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக பயன்பட்டு வருகின்றன.

சேலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ பள்ளியில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. ஹிந்து பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்குப் போகவேண்டாம் என கூறிவிட்டனர். மறுநாள் அந்த குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் பிளஸ் டூ படிக்கிற பெண் குழந்தைகள் உள்பட பலரை 30 நிமிஷம் முழங்கால் போட வைத்தனர். இது தெரிந்து சில பெற்றோர்கள் தலைமையாசிரியரை பார்த்து கேட்டபோது, எங்கள் பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டு படிக்க விரும்பினால் படிக்கட்டும். இல்லையென்றால் உங்கள் இஷ்டத்திற்கு பள்ளியை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன்  கூறிவிட்டனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன், திருப்பராய்த்துறை தபோவனம், ஆர்.எஸ்.எஸ்ஸின் வித்யா பாரதி, சின்மயா மிஷன், அமிர்தானந்தமயி நிறுவனம் போன்ற ஏராளமான ஹிந்து கல்வி அமைப்புகள் பள்ளி, கல்லூரிகளை மிக நன்றாகவே நடத்தி வருகின்றன என்பது அனைவர் கவனத்திற்கும் வரத் தொடங்கியிருப்பது நல்ல சேதி. சில ஊர்களில் நாடார், கவுண்டர், செட்டியார், முதலியார், சௌராஷ்டிரர் போன்ற  சமூகங்களின் அமைப்புகள் கூட அருமையாக கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.