கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை: சட்டப்பேரவைத் தலைவர் தகவல்

கர்நாடக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள இந்துத்துவ சிந்தனையாளர் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை என அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகவில் பாஜக ஆட்சியின் போது சட்டப்பேரவையில் இந்துத்துவ சிந்தனையாளர் சாவர்க்கரின் படம் திறக்கப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாவர்க்கர் படம் சட்டப்பேரவையில் இருந்து அகற்றப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் பதவியேற்றுள்ள சித்தராமையா சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள சாவர்க்கரின் படத்தை அகற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா கூறுகையில், ”நாட்டின் விடுதலைக்காக பாடுபாட்ட சாவர்க்கரின் படத்தை அகற்ற முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்ற விட மாட்டோம். அவ்வாறு அகற்றினால் காங்கிரஸ் அரசு கடும் விளைவுகளை சந்திக்கும்” என்றார்.

முதல்வர் விளக்கம்: இதையடுத்து முதல்வர் சித்தராமையா, ”சவார்க்கர் பட விவகாரத்தில் பேரவைத் தலைவர் யு.டி.காதர் முடிவெடுப்பார். அதில் நாங்கள் தலையிட மாட்டோம்”என கூறினார். இதுகுறித்து யு.டி.காதரிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”சாவர்க்கரின் பட‌த்தை அகற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். பாஜகவின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவே காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.