‘கபே’ குண்டு வெடிப்பு: என்.ஐ.ஏ.,க்கு மாற்றம்

”பெங்களூரு, ‘ராமேஸ்வரம் கபே’ குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது. தேவைப்பட்டால் வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைப்போம்,” என, முதல்வர் சித்தராமையா கூறினார். அதன்படி இந்த வழக்கு என்ஐஏ., வசம் ஒப்படைக்கப்பட்டது. பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த ப்ரூக்பீல்டில், ராமேஸ்வரம் கபே என்ற உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த 1ம் தேதியன்று குண்டு வெடித்தது. அதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து, சி.சி.பி., என்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர், தலையில் வெள்ளை தொப்பி அணிந்தபடியும், முகத்தை ‘மாஸ்க்’கால் மறைத்தபடி தப்பிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. ஆனால், அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை. காலை 11:30க்கு உணவகத்திற்கு வந்தவர், 11:50 மணிக்கு அங்கிருந்து வெளியேறி உள்ளார். அவர் சென்ற ஒரு மணி நேரம் 5 நிமிடம் கழித்து தான் குண்டு வெடித்துள்ளது.

தப்பிச் செல்லும் போது, கையில் அணிந்திருந்த வாட்சில், அந்த நபர் அடிக்கடி மணியை பார்த்துவிட்டு சென்ற காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால், குண்டை வெடிக்க வைக்க, சரியான நேரத்தை, ‘பிக்ஸ்’ செய்து விட்டு சென்றது தெரிய வந்துள்ளது. வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட துகள்களை, தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு எடுத்து சென்று, பரிசோதனை செய்ததில், பொட்டாசியம் நைட்ரேட் கலந்து தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குண்டு வைத்த நபர் உணவகத்திற்கு வரும் போது, 1 கிலோ மீட்டர் துாரம் நடந்து வந்துள்ளார். உணவகத்தில் இருந்து வெளியே சென்ற பின், வெறும் 100 மீட்டர் துாரம் தான் நடந்துள்ளார். பஸ்சில் ஏறி தப்பிச் சென்றாரா; வேறு யாராவது அவரை வாகனத்தில் அழைத்து சென்றனரா என்பதும் மர்மமாக உள்ளது.

இதற்கிடையில், சிக்கமகளூரில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், ”பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கை, அரசு எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது தீவிரமான விஷயம்; மக்களுக்கு பாதுகாப்பு முக்கியம். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வைத்தவர் இன்னும் சிக்கவில்லை. ”இந்த வழக்கை தேவைப்பட்டால், என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பது பற்றி யோசிப்போம். பெங்களூரை, ‘பாம் பெங்களூரு’ என்று பா.ஜ., தலைவர்கள் விமர்சிப்பது சரியல்ல.

”பா.ஜ., ஆட்சியில் தான், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு, மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகம் முன் குண்டு வெடிப்பு நடந்தன. அவற்றுக்கு நாங்கள் என்ன பெயர் வைப்பது,” என்றார். பெங்களூரு, ‘ராமேஸ்வரம் கபே’ குண்டு வெடிப்பிற்கு, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்., அமைப்பு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2014ல் பெங்களூரு சர்ச் தெரு, 2022ல் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், ஒரே ஒரு நபர் தான்.

அதேபோல, ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பை நிகழ்த்தியதும் ஒரே நபர் தான். மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் நடந்துள்ளன. சர்ச் தெரு, மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்புக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.