கங்கைக் கரையில் திருக்குறள் மாநாடு

உலகளாவிய கருத்துகளின் பெட்டகமாக விளங்கும் நூல், திருக்குறள். இது எந்த மொழிக்கோ அல்லது நாட்டுக்கோ சொந்தமானது என்று கூற முடியாது. ஏனெனில், தமிழில் திருக்குறள் இயற்றப்பட்ட போதிலும் தமிழ் என்ற வார்த்தை இதில் ஓர் இடத்தில் கூட வரவில்லை.

நூற்றுக்கணக்கான மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் திருக்குறள் ஆர்வலர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய், தமிழ் மீதும் திருக்குறள் மீதும் மிகுந்த நாட்டம் கொண்டவர். அவர் எம்.பி.யாக இருந்தபோது திருவள்ளுவர் கங்கை திருப்பயணம் என்ற பெயரில் திருவள்ளுவரின் ஆள் உயர திருவுருவச் சிலையை பாரதத்தின் கடைக்கோடியான கன்யாகுமரியிலிருந்து ஹரித்வாருக்கு எடுத்து வந்தார். அங்கே கங்கைக் கரையில் எழில்மிக்க இடத்தில் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர் பிரச்சினை எழுப்பினார்கள். ஆனால் இதற்கு நல்ல முறையில் விரைவிலேயே தீர்வு காணப்பட்டுவிட்டது.

ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் ஹரித்வாரில் திருக்குறள் மாநாட்டை வெகு விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தருண் விஜய் கூறியுள்ளார். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட இருக்கும் திருக்குறள் மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புனித கங்கை பாயும் ஹரித்வாரில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட இருப்பது இதுவே முதல் முறை. இதை ஒரு முன்னோடி நிகழ்வாக எடுத்துக்கொள்ள வேண்டும். அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அற்புதமான எண்ணங்களை திருக்குறள் எடுத்துரைக்கிறது. உலகப் பொதுமறை என்ற இலக்கணத்துக்கு திருக்குறள் முற்றிலும் தகுதி வாய்ந்தது.

தமிழ் மொழியின் பெயரால் திருக்குறளை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் குறுக்குவது சரியான அணுகுமுறை அல்ல. திருக்குறள் விரிந்து பரந்தது என்பது அகிலம் முழுவதும் நிலைநாட்டப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் பாரதம் முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் திருக்குறள் மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். இது வெறும் அரசு விழாவாக மட்டும் இருக்கக் கூடாது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களும் இதில் ஆர்வப்பெருக்குடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் எதற்காக திருக்குறள் மாநாடு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ அந்த எண்ணம் ஈடேறும்.

தருண் விஜய் காட்டியுள்ள வழி வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது. இதைப் போல ஒத்த கருத்துடைய மற்றவர்களையும் ஒருங்கிணைத்து அனைவரும் சேர்ந்து திருக்குறள் தேரை வடம் பிடித்து இழுத்து வலம் வரச் செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் இது உலகத்திற்கே வரமாக அமையும் என்பது திண்ணம்.