ஓடையைக் கலக்குவது ஓநாய்!  ஒரே வேலை, ஊருக்கு உபதேசம்!  மண்குதிரையை நம்பும் மேதாவிகள்

ஓடையைக் கலக்குவது ஓநாய்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது ஹைதராபாத் மாநாட்டில், மீண்டும் ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டுகளை வைத்து புலம்பத் தொடங்கியுள்ளார்கள். சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி துவக்க உரையில், “ஆர்.எஸ்.எஸ்ஸால் கட்டுப்படுத்தப்படும் தற்போதைய பா.. அரசாங்கம், மக்கள் மீது துயரங்களை திணிக்கின்ற கொள்கைகளை தொடர்கிறது.  இது சமூகத்தின் ஒற்றுமையையும், இணக்கத்தையும் அச்சுறுத்துகிறது,” என்றார். பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸை கட்டுப்படுத்த வேண்டிய தலையாய கடமை கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளது என்று கூறினார்.

‘இலக்கை அடைய எந்தவிதமான வழிமுறைகளையும் பின்பற்றலாம், மக்களைச் சுரண்டுவோர் என கருதியவர்கள், பாலியல் தொழிலாளிகள் முதல் பாதிரியார்கள் வரை கொல்லப்பட வேண்டும் வர்க்க எதிரிகள் ஒழிக்கப்பட வேண்டும்’  என்ற  லெனின் தத்துவப்படி, ஒரு பாசிஸ்ட் அமைப்புக்குரிய குணங்கள் கொண்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. இன்று சீனாவின் தாளத்துக்கு ஏற்படும் கம்யூனிஸ்டுகள், புரட்சிக் காலத்தில் மாசேதுங் ஈவிரக்கமின்றி எதிரிகளை அழித்தொழித்ததை மறைக்கிறார்கள். தனக்கு விசுவாசமில்லாமல் இருப்பதாக நினைக்கும் கட்சித் தோழர்களை மாசேதுங் கொன்று விடுவார். அவருக்கு எதிராகச் செஞ்சேனையில் ஒரு பிரிவினர் கலகம் செய்தார்கள், அந்த கலக்காரர்களை படுகொலைகள் மூலம் அடக்கினார். இவ்வாறு படுகொலை ஆனவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரம்.  இந்த பாசிஸ்ட் வழியில் வந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாசிஸ்ட்அமைப்பு என்கிறார்கள்.

1977 முதல் 2009 வரை தோழர்களின் தர்பாரில் மேற்கு வங்கத்தில் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 55,408.  1997-ல் மேற்கு வங்க சட்ட மன்றத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் 1996 வரை 28,000 படுகொலைகள் அரசியல் கொலைகள் என தெரிவித்தார்.

சி.பி.எம். மாநாட்டில் இரண்டு பாசிஸ்டு கட்சிகளை தன் அருகில் வைத்துக் கொண்டு உபதேசம் செய்கிறார்கள். ஒன்று சி.பி.ஐ. (எம்.எல்.) லிபரேஷன் என்ற கட்சியும், இரண்டாவது  இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) (Socialist unity centre of India (Communist); இந்த இரண்டும் மாவோயிஸ்ட் சிந்தனை கொண்டவை.  நக்சல்பாரி முத்திரை பெற்ற கட்சிகள்.  இரண்டும் ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராக களம் கண்டவை. 1967க்கு முன்னால் இரண்டு கட்சியின் தலைவர்களும் சி.பி.எம்மில் பொறுப்பு வகித்தவர்கள். இந்த இரண்டு அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகள்.  2015-ல் உலகம் முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் முதல் நான்கு இடங்களை பிடித்த பயங்கரவாத அமைப்புகள்: தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ்., போக்கோ ஹராம், மாவோயிஸ்ட். அப்படிப்பட்ட மாவோயிஸ்ட்களை உருவாக்கியவர்கள் சி.பி.எம். கட்சியினர். போதுமா?

ஒரே வேலை, ஊருக்கு உபதேசம்!

தலித்துக்களின் காவலனாக தன்னைக்காட்டிக் கொள்ளும் மார்க்ஸ்ட்கள், கட்சியில் மட்டும் தலித்துக்களுக்கு முக்கியமான இடத்தை கொடுக்க மாட்டார்கள்.  ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் தலித் ஒருவருக்கு பொலிட் பீரோவில் இடம் கிடைக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  ஆனால் இறுதியில் அவருக்கு கிடைக்கவில்லை.  ஏன் என்ற கேள்வியைக்  கூட கேட்க கட்சியில் எவருக்கும் துணிவு கிடையாது.  பாரதிய ஜனதா கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் தலித்துக்கு விரோதமான அமைப்புகள் என கூச்சல்  போடும் தோழர்கள் ஏன் தங்களது கட்சியின் உயர் மட்ட குழுவில் ஒரு தலித்தை சேர்க்கவில்லை?  கட்சியில் தலித் தலைவர்கள் கிடையாதா?  சி.பி.எம். கட்சி துவங்கி 51 ஆண்டுகள் முடிகின்றன.  இத்தனை ஆண்டுகளில் இவர்களின் கட்சிக்கு ஒரு தலித் தலைவர் கிடைக்கவில்லையா?  கேரளத்தைச் சார்ந்த ஏ.கே.பாலனுக்கு பொலிட்பீரோவில் இடம் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில்,  அவரது பெயர் இடம் பெறவில்லை.   சாதிக்கு எதிரான கட்சி என மார் தட்டும் இவர்கள், 95 உறுப்பினர்களை கொண்ட மத்திய கமிட்டியிலும், 17 உறுப்பினர்களை கொண்ட பொலிட்பீரோவிலும், ‘உயர்’ சாதியினருக்கே அதிக அளவில் இடம் தந்துள்ளார்கள். குறிப்பிட்ட மாதிரி  ஒரு சில இஸ்லாமியர்களும், சில பிற்பட்ட வகுப்பினரும் மட்டுமே இடம் பெற்றுள்ளார்கள்.  ஆனால்  பொதுவாழ்வில், சாதிக்கு  அப்பாற்பட்டவராக வேஷம் கட்டுவதில் சளைக்காதவர்கள் கம்யூனிஸ்ட்கள்.

நாங்கள் பெண்களுக்கான அமைப்பு என குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2005க்கு பின் பிருந்தாகாரத்தும், 2015க்கு பின்னர் சுபாஷினி அலி என்ற இருவர் மட்டுமே பொலிட் பீரோவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இதுவரை தேர்வு பெற்ற நான்கு பேரும் ‘உயர்’ சாதிதான்.

மண்குதிரையை நம்பும் மேதாவிகள்

காங்கிரஸ் கட்சியுடன் எவ்வித உடன்பாடும் செய்துகொள்ளக் கூடாது என்பது பிரகாஷ் காரத் கொண்டு வந்த தீர்மானம்.  ஆனால் காங்கிரஸ் கட்சியின் செல்லப்பிள்ளை தோழர்

சீதாராம் யெச்சூரி காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.  2019-ல் மாநில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்றும், நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரச்சினைகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக செயல்படலாம் என்றும் முடிவு செய்துள்ளார்கள்.   தொடர் தோல்வியின் விளிம்பில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயக்கம் காட்டுகிறார்கள்.  எந்த மாநிலத்திலும் தனியாக தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு கிடையாது. ராஜஸ்தான் மாநிலத்தை தவிர. இதைத் தெரிந்து கொண்டவர் பிரகாஷ் காரத், காங்கிரஸ் கட்சியின் மூலமாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற யெச்சூரியின் கணக்கும் பொய்க்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில், தோழர்கள் ‘மதசார்பற்ற’ கட்சிகளுடனும் மாநிலக் கட்சிகளுடனும் உறவு வைத்துக் கொள்ளலாம் என தீர்மானித்துள்ளார்கள்.  தங்களது  சித்தாந்தங்களை புதைகுழியில்  தள்ளி விட்டு, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எவருடனும் கூட்டணி வைத்துக் கொள்ள துடிக்கிறார்கள்.  இதனால் தோழர்களின் சாயம் வெளுத்ததுதான் கண்ட பலன்.

 

அம்பேத்கருக்கு மக்களிடையே இருக்கும்புகழை கெடுக்கும் நோக்கோடு,முஸ்லிம் லீகும் காங்கிரஸ் கட்சியும் 1954ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அம்பேத்கரைத் தோற்கடித்தன. அப்போதைய ஜனசங்கமும் (பா.ஜ.க.), வீரசாவர்க்கர் தலைமையிலான ஹிந்து மகாசபாவும் சேர்ந்து அவரை மாநிலங்கள் அவை தேர்தலில் வெற்றி பெற வைத்து ராஜ்ய சபையிக்கு அனுப்பின.