சுட்டெரிக்கும் வெய்யில் சூட்டை சட்டுன்னு தணிக்க…

சுட்டெரிக்கும் வெயிலைத் தணிக்க குளிர் பிரதேசம் நாடி நாம் பயணிப்பதுண்டு. குளுகுளுவென்ற சிதோஷ்ண நிலையும், சில்லென வீசும் காற்றும், பச்சை பசேலென்ற இயற்கை காட்சியும் வானளாவிய மரங்களும், மலை பேருந்து பயணமும் தான் சுற்றுலா என்றவுடன் நம் கற்பனையில் சிறகு விரிக்கும்.

ஊரைச் சுற்றி  பார்ப்பதோடு அல்லாமல் அங்கு இருக்கும் பிரசித்திபெற்ற இடங்கள், கலாச்சாரம், அங்கு வாழும் மக்களை அறிய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் இரு சுற்றுலாத் தலங்களை நாம் காண்போம்…

 ஏலகிரி

 பசுமை மாறா மரங்களும் மனதை வருடும் பறவைகளின் பாட்டும் ஏலகிரி மலையின் பயணத்தின் போது நம்மை வரவேற்கிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இம்மலைவாழிடம் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இதற்கு ஒரு இடமுண்டு. இங்குள்ள பூங்கானூர் ஏரி, குழந்தைகள் பூங்கா மிகவும் பிரசித்தி பெற்றது. மங்கலம் தாமரைக்குளம், இயற்கைப் பூங்கா சுற்றிப்பார்க்க சிறந்த இடங்களாக உள்ளன. சாகச விளையாட்டுகளான பாரா கிளைடிங், டிரக்கிங் போன்றவை இங்கு பிரபலம். ஏலகிரி மலையை ஒட்டி தொடர்ச்சியாக ஜவ்வாது மலை உள்ளது. அங்கும் சுற்றிப் பார்ப்பதற்கு பீமன் அருவி முக்கிய சுற்றுலா தலமாக இருக்கிறது.

ஜவ்வாது என்றால் வாசனை. அதற்கேற்றார்போல் சந்தன மரங்கள் விரவி காணப்படுகிறது, இங்கு பல்வேறு வாசனைப் பொருட்கள் விளைவிக்கப்படுகிறது.

இங்கு உள்ள மலைவாழ் மக்களின் பிரதான தொழில் விவசாயம். சாமை, வரகு, தேன் முதலியவை முக்கிய உற்பத்தி பொருட்கள்.

ஜவ்வாது மலையின் முக்கிய இடங்கள் புதூர் நாடு, நெல்லிவாசல், காவனூர், ஜமுனாமரத்தூர் ஆகியவை.

புதூர்நாடு அருகே வலுதலுப்பட்டு கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும்.  சுமார் 10,000 பேர் உள்ளூரில் இருந்தும் வெளியூரில் இருந்தும் வந்து காளியம்மனை தரிசிக்கிறார்கள்.

* கோடைக் காலத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

* நடுத்தர வர்க்க மக்களின் குறைந்த செலவில் கோடை சுற்றுலாவை ஏலகிரி சுற்றுலா சிறந்த தேர்வாக இருக்கும்.

* ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஜோலார்பேட்டையிலும், பேருந்தில் பயணிப்பவர்களுக்கு திருப்பத்தூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

இந்திய வானியற்பியல் துறையின் முதன்மை வானியல் ஆய்வகமான வைணுபாப்பு ஆய்வு நிலையம் ஏலகிரியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் காவலூரில் அமைந்து உள்ளது.

வைணுபாப்பு ஆய்வு தொலைநோக்கி ஆசியாவிலே மிகப்பெரியதாகும். இது 1986ல் இருந்து செயல்பாட்டுக்கு விடப்பட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்கள் வானில் உள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் பார்க்க கட்டணம் இன்றி அனுமதிக்கிறார்கள்.

 ஏற்காடு

 ஏற்காடு மலையை ஏழைகளின் ஊட்டி என்று அழைப்பார்கள். ஏரிக்காடு என்பதே மருவி ஏற்காடு என்றாகி விட்டது. சேலத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது.

இங்குள்ள இயற்கை எழியில் கொஞ்சும் மரங்களும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இங்குள்ள மலைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள பகோடா முனையில் இருந்து பார்த்தால் மலையின் கீழுள்ள பகுதியினை முழுமையாக கண்டுகளிக்கலாம்.

 ஏற்காடு ஏரி, லேடிசீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் ஆகியவை பிரதான இடங்களாக ஏற்காட்டில் உள்ளன. மே மாதத்தில் கோடை விழா 7 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி, படகு போட்டி ஆகியவை நடைபெறும்.

குறைந்த செலவில் கோடைக்கால சுற்றுலாவை அனுபவிக்க சிறந்த தேர்வாக ஏற்காடு இருக்கிறது. சேலத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.