ஒரே பாரதம் உன்னத பாரதம் கொள்கைக்கு வலுசேர்த்த தீர்ப்பு! – பிரதமர் நரேந்திர மோடி

அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பைை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில் இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. 2019 ஆகஸ்ட் 5 அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவு அரசியல் சட்டப்படியான ஒருமைப் பாட்டை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதே அல்லாமல், ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகவே கூறியுள்ளது. 370-வது பிரிவு, நிரந்தர தன்மை கொண்டதல்ல என்ற உண்மையையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கின் பரந்தநிலப்பரப்பும், அமைதியான பள்ளத்தாக்குகளும், கம்பீரமான மலைகளும், கவிஞர்கள், கலைஞர்கள், சாகச வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பல தலைமுறைகளாக இடம்பெற்றுள்ளன. இந்த பூமி அசாதாரணமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள இமயமலைவானத்தைத் தொட்டு நிற்கிறது. இங்குள்ள ஏரிகள்மற்றும் நதிகளின் நீர்ப்பரப்பு சொர்க்கத்தைப் பிரதிபலிக்கின்றன.
துரதிருஷ்டவசமாக நூற்றாண்டு கால காலனிமயம், பொருளாதார மற்றும் மனம் சார்ந்த அடிமைத்தனம் காரணமாக இது பலவகையான குழப்பம் மிக்க சமூகமாக மாறியது. மிக அடிப்படையான விஷயங்களில் தெளிவான நிலையைஎடுப்பதற்கு மாறாக, இரட்டை நிலையை நாம் அனுமதித்தது குழப்பத்துக்கு வழிவகுத்தது. இத்தகைய மனநிலைக்கு மிகப்பெரிய பலியிடமாக ஜம்மு, காஷ்மீர் மாறியது சோகமாகும்.
எனது வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் இருந்து ஜம்மு, காஷ்மீர் மக்கள் இயக்கத்துடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஜம்மு, காஷ்மீர் கட்டமைப்பு குறித்து நான் சார்ந்திருக்கும் சித்தாந்தம் என்பது வெறுமனே ஓர் அரசியல் விஷயம் அல்ல. அது சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவது பற்றியது. நேரு அமைச்சரவையில் முக்கியமானபொறுப்பு வகித்த டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, நீண்ட காலத்துக்கு அரசில் நீடித்திருக்க முடியும்.
இருப்பினும், காஷ்மீர் பிரச்சினையால் அவர் அமைச்சரவையில் இருந்து விலகினார். தனது வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றபோதும், கடுமையான பாதையை அவர் தேர்வுசெய்தார். அவரது முயற்சிகளும், தியாகமும்,காஷ்மீர் பிரச்சினையுடன் கோடிக்கணக்கான இந்தியர்களை உணர்வு பூர்வமாக இணைப்பதற்கு வழிவகுத்தன. சில ஆண்டுகளுக்குப் பின், நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், சக்திமிக்க முழக்கத்தை முன்வைத்தார். ‘மனிதநேயம்’, ‘ஜனநாயகம்’, ‘காஷ்மீரியம்’ என்ற அந்த முழக்கம் மகத்தான ஊக்க சக்தியாக இருக்கிறது.
ஜம்மு, காஷ்மீரில் நடந்தது நமது தேசத்துக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் மிகப்பெரிய துரோகம் என்பது எப்போதும் எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை அகற்ற, என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது.
அரசியல் சாசனத்தின் 370, 35 (ஏ) பிரிவுகள் இதற்கு மிகப்பெரும் தடைகளாக இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகளும், அடித்தட்டு மக்களும் தான். இந்தியாவில் உள்ள மற்ற குடிமக்கள் பெறுகின்ற உரிமைகளையும், வளர்ச்சியையும் காஷ்மீர் மக்கள் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தின. ஒரே தேசத்தின் மக்களிடையே பாகுபாடுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, அங்குள்ள மக்களின் வலிகளைத் தெளிவாக தெரிந்திருந்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பினாலும், தேசத்தின் மக்கள் அதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
2014-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சிறிது காலத்திலேயே ஜம்மு, காஷ்மீரைத் தாக்கிய பெருவெள்ளம் கடுமையான சேதத்தை விளைவித்தது. 2014, செப்டம்பரில் நிலமையை மதிப்பீடு செய்ய நான் நகர் சென்றபோது, மறுவாழ்வுக்கு ரூ.1,000 கோடி சிறப்பு நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில், பலதரப்பு மக்களை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். அவர்களுடனான கலந்துரையாடலில் ஒரு பொதுத்தன்மை இருப்பதை நான் கவனித்தேன். இந்த மக்கள், வளர்ச்சியை மட்டும் விரும்பவில்லை. கடந்த பல பத்தாண்டுகளாக பரவலாக நிலவுகின்ற ஊழலில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்பினார்கள். ஜம்மு, காஷ்மீரில் ஏற்பட்ட இழப்பை நினைவுகூரும் வகையில், அந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்றும் அன்றைய தினம் காஷ்மீரில் இருப்பது என்றும் முடிவு செய்தேன்.
காஷ்மீரின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்த, அமைச்சர்கள் அங்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்வது என்றும் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடுவது என்றும் முடிவு செய்தோம். 2014 மே மாதம் தொடங்கி 2019 மார்ச் வரை 150 முறை அமைச்சர்களின் பயணம் அமைந்திருந்தது. காஷ்மீரின் வளர்ச்சி தேவைகளை நிறைவேற்றும் முக்கிய நடவடிக்கையாக 2015-ல் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, வேலை உருவாக்கம், சுற்றுலா மேம்பாடு, கைவினை தொழில் துறைக்கு ஆதரவு என்ற முன்முயற்சிகளைக் கொண்டிருந்தது.
2019 ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியர் ஒவ்வொருவர் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவை நமது நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதிலிருந்து ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பு 2023 டிசம்பரில் வந்துள்ளது. ஆனால் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அணிவகுப்பைக் கண்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் அரசியல் நிலைப்பாட்டில் ஜனநாயகத்தின் வேர்களில் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான பலன்களைப் பெறவில்லை. அதேபோல லடாக் மக்களின் விருப்பங்களும் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டன. இவை அனைத்தையும் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மாற்றியது. அனைத்து மத்திய சட்டங்களும் இப்போது அங்கு அமல்படுத்தப்படுகின்றன. பிரதிநிதித்துவமும் பரவலாக்கப்பட்டுள்ளது – மூன்றடுக்கு பஞ்சாயத்துராஜ் முறை அமலில் இருக்கிறது. வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அனைவராலும் மறக்கப்பட்ட அகதி சமூகத்தினர் வளர்ச்சியின் பலனை அனுபவிக்க தொடங்கி இருக்கின்றனர்.
முக்கியமான மத்திய அரசின் திட்டங்கள் கிட்டத்தட்ட முழுமையடையும் கட்டத்தில் உள்ளதால் சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்களும் இவற்றால் பயனடைந்துள்ளனர். இவற்றில் கிராமங்களில் 100 சதவீத மின்வசதியை உறுதிசெய்யும் சவுபாக்யா, இலவச சமையல் எரிவாயுஇணைப்பை வழங்கும் உஜ்வாலா மற்றும்எல்இடி மின்விளக்குகளை சலுகை விலையில் வழங்கும் உஜாலா திட்டங்கள் அடங்கும். வீட்டுவசதி திட்டங்கள், குடிநீர் இணைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் ஊழலும் ஒரு தலைப்பட்சமும் இருந்த நிலையிலிருந்து மாறுபட்டு வெளிப்படைத்தன்மையோடும் முறையான நடைமுறைகளோடும் நிரப்பப்பட்டன. சிசு இறப்பு விகிதம் குறைப்பு போன்ற இதரவிஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது. அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அனைவருக்கும் கண்கூடானது. இதற்கான பெருமை இயல்பாகவே ஜம்மு காஷ்மீர் மக்களின் மனஉறுதிக்குஉரியது. இவர்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் சக்திகளாக இருக்கவே விரும்புகிறார்கள்என்பதையும் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் வளர்ச்சி, முன்னேற்றம் சுற்றுலாப்பயணிகளின் வருகை ஆகியவற்றில் வியத்தகு சாதனை நிகழ்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது. ஒற்றுமையின் பிணைப்புகள், நல்லாட்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது வரையறுத்துள்ளது. இப்போது ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஓவியம் தீட்டுவதற்கான தூய்மையான சித்திர துணியைப் போல பிறக்கின்றன. அப்படிப் பிறக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகள்தான் தங்களின் துடிப்பான எதிர்கால விருப்பங்களை அதில் வண்ண ஓவியங்களாக தீட்ட இயலும். இப்போது மக்களின் கனவுகள் கடந்த காலத்தின் சிறைகளாக இல்லாமல் எதிர்காலத்தின் சாத்தியங்களாக இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அதிருப்தி, ஏமாற்றம், விரக்தி ஆகியவற்றிற்கு மாற்றாக வளர்ச்சி, ஜனநாயகம்,கண்ணியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.