ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது இஸ்ரோ

ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவி உள்ளது, இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோவின் சாதனை மvslvகுடத்தில் புதிதாகப் பதிக்கப்பட்ட வைரமாக ஒளிர்கிறது.

இஸ்ரோ, நம் நாட்டின் சொந்த தேவைகளுக்காகவும் வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மூன்று செயற்கைக்கோள்கள், அந்நிய நாடுகளைச் சேர்ந்த 15 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 20 செயற்கைக் கோள்கள் ஜூன் மாதம் 22ம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்டது, நாடு முழுவதும் பாராட்டை ஈட்டியுள்ளது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக கவுண்ட் டவுன், இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

26 நிமிடங்களில் கார்ட்ரோசாட் 2 உள்ளிட்ட 20 செயற்கை கோள்களையும் அவற்றிற்குரிய பாதைகளில் ராக்கெட் நிலைநிறுத்தியது. இந்த மகிழ்ச்சியை சக விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் பகிர்ந்துகொண்டார்.

20 செயற்கைக்கோள்கள் பற்றிய விவரங்களை சுருக்கமாகப் பார்ப்போம். ‘சத்தியபாமா சாட்’ செயற்கோள், சென்னை சத்தியபாமா பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்தது. இதன் எடை 1.5 கிலோ. பசுமை இல்ல வாயுகள் குறித்த தகவல்களை சேகரிக்க இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள புனே பொறியியல் கல்லூரி சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்வயம்’ செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.

பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் ஏந்திச் சென்ற செயற்கைக்கோள்களில் பிரதானமானது கார்ட்ரோசாட் 2 செயற்கைக்கோள் ஆகும். இது பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறது. 727.5 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 505 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.

கார்ட்ரோசாட் 2 செயற்கைகோள் பூமியைச் சுற்றிவரும்போது, அதன் பின்புறத்தில் சூரியன் இருக்கும். சூரிய ஒளி படுகிற பூமி பகுதியின் மேலேதான் இந்த செயற்கைக்கோள் பயணிக்கும். இதனால் பூமியை நிழல் விழாமல் எளிதாக புகைப்படம் எடுக்கும். 2014ல் 0.65 மீட்டர் பிரிதிறன் கொண்ட கேமராவோடு செயற்கைக் கோள் ஒன்றை சீனா ஏவியது. நாம் இப்போது அனுப்பியுள்ள கார்ட்ரோசாட் 2 செயற்கைகோள் இதற்குச் சமமானது. இதன் மூலம் எல்லைப்பகுதியில் வேற்று நாட்டுப் படைகள் நடமாடினால் அதுபற்றிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் நம்மால் துல்லியமாகப் பார்க்க முடியும்.

மேலே குறிப்பிட்ட மூன்று செயற்கைக் கோள்கள் நீங்கலாக மற்ற 17 செயற்கைக்கோள்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. அமெரிக்காவைச் சேர்ந்த 13 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் டவ் வகையைச் சேர்ந்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 12. இந்த ஒவ்வொரு செயற்கைக்கோளின் எடையும் 4.7 கிலோ ஆகும்.

அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென் 2-1, 110 கிலோ எடை கொண்டது. இவை தவிர கனடாவின் இரண்டு செயற்கை கோள்கள் ஏவப்பட்டன. எம்3எம்சாட் செயற்கைக்கோளின் எடை 85 கிலோ, ஜிஎச்ஜி சாட் டியின் எடை 25.5 கிலோ.

ஜெர்மனியின் பைரோஸ் செயற்கைக்கோள் (130 கிலோ), இந்தோனேஷியாவின் லபன்ஏ-3 செயற்கைக்கோள் (120 கிலோ). கனடாவின் 2 செயற்கைக்கோள்களான எம்3 எம் சாட் (85 கிலோ), ஜிஎச்ஜி சாட் டி (25.5 கிலோ) ஆகியவையும் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியது இதுவே முதல்முறை. 2008ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 10 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இப்போது இஸ்ரோ இந்த சாதனையை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுமைய இயக்குனர் கே. சிவன், வணிக ரீதியாக ஒரே முயற்சியில் வெவ்வேறு செயற்கைக்கோள்களை வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தவேண்டிய தேவை உள்ளது. அதற்காக ராக்கெட் இயந்திரம் மறு இயக்கம் செய்யப்படவேண்டும் என்பது இன்றியமையாதது. இதன் வாயிலாக பல செயற்கைக்கோள்களை அனுப்பும்போது ஒரு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிறுத்தியபிறகு, அடுத்த செயற்கைக்கோளை வேறு சுற்றுப்பாதையில் ஏவ முடியும். விஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியுள்ளனர். இஸ்ரோ, செயற்கைக்கோள்களை அனுப்பியதில் சதம் அடித்துவிட்டது. இப்போது அனுப்பப்பட்ட 20 செயற்கைக்கோள்களையும் சேர்த்து இஸ்ரோ அனுப்பியுள்ள மொத்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 113 ஆகும்.

இந்தியா 1999ல் ஒரியா, ஜெர்மனியின் செயற்கைக்கோள்களை ஏவி இத்துறையில் வர்த்தகப் பயணத்தை தொடங்கியது. இதுவரை அந்நிய நாடுகளின் 57 செயற்கைக் கோள்களை நாம் ஏவியுள்ளோம். இந்திய ராக்கெட்டை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால் இதையும் மீறி நாம் சாதனைப்படைத்து வருகிறோம். இந்தியாவின் ராக்கெட் விலை மலிவாக இருப்பதால்தான் அமெரிக்க செயற்கைக்கோள்களும் நம்மால் விண்ணில் ஏவப்படுகின்றன.

இந்தியாவின் விஎஸ்எல்வி ராக்கெட் தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி குவித்து வருகிறது.

ஆண்டுதோறும் 18 ராக்கெட்டுகள் ஏவப்படும் – கிரண்குமார்

இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியதாவது, செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும் செலவைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது ஆண்டுக்கு 12 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 18 ஆக உயர்த்த உத்தேசித்துள்ளோம். ஜூலை 12ம் தேதி ஜிசாட் 18 செயற்கைக்கோள் ஏவப்படுவதாக இருந்தது. அதனுடன் சேர்த்து ஏவப்படும் மற்றொரு செயற்கைக்கோளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இம்முயற்சி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்சாட், 2 கல்விநிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 5 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவ இருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதால் அவற்றின் பாகங்களை ஒருங்கிணைக்கும் கூடம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு மூன்றாவது ஏவுதளம் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நிகழ் ஆண்டு இறுதியில் புதிய திட்டம் அறிவிக்கப்படும்.