ஒரே நாளில் நான்கு தங்கம்

துபாயில் 21வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்கு உட்பட்டோர்) நடக்கிறது. இந்தியா சார்பில் 31 வீரர், 29 வீராங்கனை பங்கேற்கின்றனர். பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பாவனா, 6.32 மீ., துாரம் தாண்டி முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது பாவனாவின் சிறந்த துாரமாக அமைந்தது. இவர், உயரம் தாண்டுதலில் தேசிய சாதனை (1.92 மீ.,) படைத்துள்ள சஹானா குமாரியின் மகள்.

பெண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் ஏக்தா தே, 10 நிமிடம், 31.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் இந்திய வீரர் ரன்விர் குமார் சிங், 9 நிமிடம், 22.67 வினாடி நேரத்தில் ஓடி முதலிடம் பெற்று, தங்கம் தட்டிச் சென்றார். குண்டு எறிதலில் அனுராக் சிங் (19.23 மீ.,) தங்கம் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் கடைசி சில வினாடியில் பின்தங்கிய இந்தியாவின் வினோத், 14 நிமிடம், 9.44 வினாடி நேரத்தில் ஓடி, இரண்டாவது இடம் பெற்றார். பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் பங்கேற்கும் பாவனா, உயரம் தாண்டுதலில் மூன்றாவது இடம் (1.70 மீ.,) பிடித்தார். ஆண்கள் 4*100 மீ., ரிலே ஓட்டத்தில் இந்தியாவின் கார்த்திகேயன், மகேந்திரா, ஜெயராம், ஹிமா தேஜா இடம் பெற்ற அணி (40.43 வினாடி) அரையிறுதிக்கு தகுதி பெற்றது.