ஒரு லட்சம் கோடி ரூபாயில் 112 தேசிய நெடுஞ்சாலைகள்

டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து ஹரியாணாவின் குருகிராம் வரை 27.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.4,100 கோடி செலவில்எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது 16 வழிச் சாலை ஆகும்.
இதன்மூலம் டெல்லி, ஹரியாணா இடையிலான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. ஹரியாணாவின் குருகிராமில் நேற்று நடைபெற்ற விழாவில் துவாரகா விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். டெல்லி, உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.20,500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளையும் பிரதமர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.32,700 கோடியில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அவர் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
ஒட்டுமொத்தமாக 16 மாநிலங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார், அப்போது அவர் பேசும்போது, ‘‘வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பு 2024-ம் ஆண்டில் மட்டும் இதுவரை ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின்தவறுகள் தற்போது சரி செய்யப்படுகின்றன. இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.