ஒரு நூற்றாண்டு வரலாறு காணாத தமிழக வெள்ளம்

தலைநகர்

தத்தளித்தது

   கடலூர் கதறியது

திருவள்ளூர் திண்டாடியது

தரைப்படை வந்தது

விமானப்படை வந்தது

கடற்படை வந்தது

கடலோரப்படை வந்தது

வெள்ளம் பாதித்த மக்கள் துயர் துடைக்க ஓடோடி வந்தனர்

ஆர்எஸ்எஸ் அன்பர்கள்

தீபாவளி, திருகார்த்திகை கொண்டாடி முடித்த கையோடு சென்னைவாசிகள் ஒரு பெருமூச்சு விடுவதற்குள் வீடுதோறும் மாநகராட்சி ஊழியர்கள் ‘குடி நீரை சேமியுங்கள்’, ‘தண்ணீரை வீணாக்காதீர்கள்’, ‘தண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம்’ என்றெல்லாம் வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை கொடுத்துவிட்டுப் போனதைப் பார்த்து மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குத் தயார் ஆனார்கள்.

ஆம், நவம்பர் துவக்கத்தில் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகளெல்லாம் அனேகமாக வறண்டிருந்தன. அதுவரை பருவமழையும் அரைகுறையாக வந்துபோயிற்று. மக்களின் நாக்கு வறள ஆரம்பித்தது.

இந்த கட்டத்தில்தான் நவம்பர் 9ஆம் தேதி ஒரே நாளில் 437 மில்லி மீட்டர் (நெய்வேலியில்) கொட்டித் தீர்த்தது, வடகிழக்கு பருவமழை. இதில் தப்பிய சென்னை, நவம்பர் 15 அன்று வானத்திலிருந்து பூமிக்கு கோடுபோட்டதுபோல மணிக்கணக்காக கொட்டித் தீர்த்த மழையில் நனைந்து தெப்பக்கட்டையானது.

தண்ணீர் கஷ்டம் வராது என்று கொண்டாடப் புறப்பட்ட சென்னை மக்களுக்கு பேரிடியாக நவம்பர் 23 அன்று மாலை ஒரே மணி நேரத்தில் 50 மில்லி மீட்டர் மழை விளாசித் தீர்த்ததில் முதல் முறையாக சென்னைவாசிகள் ஏதோ பெரிய ஆபத்து வரப்போகிறது என்ற உணர்வு பெற்றார்கள். ஆனால் ஒரு பெருநகருக்கே உரிய லட்சணத்திற்கு ஏற்றபடி வாய்க்காலாக மாறிய வீதிகளில் வாகனங்களின் கடும் நெரிசல், வேலைக்கு போவோர் வருவோர் பல மணி நேரம் சாலைகளிலேயே தவம்கிடக்கவேண்டிய சங்கடம். பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குப் போகும் பழக்கத்தையே மறந்துவிடுவார்கள் போல் இருந்தது. அத்தனை நாள் மழையால் பள்ளிகள் மூடப்பட்டன. இந்தக் களேபரங்களில் மூழ்கிவிட்டார்கள் சென்னை வாசிகள்.SLIDE

வறண்டிருந்த ஏரிகள் நிரம்பியது மட்டுமல்ல வழியவும் தொடங்கின. வழிந்த நீர் சென்னையின் பெரும்பகுதியை வெள்ளக்காடாக்கியது. குறிப்பாக சென்னையின் தென் பகுதி மக்கள் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை இயற்கையின் சீற்றத்துக்கு பெருமளவு இலக்கானார்கள். உதாரணமாக தாம்பரத்தை ஒற்றிய முடிச்சூர் வட்டாரம். அங்கே அடுக்குமாடி கட்டிடங்களில் முதல் மாடி வரை தண்ணீர் ஏறி மக்களை இரண்டாவது மாடிக்கு ஏற்றிவிட்டது!

மக்கள் ஆபத்தை உணர்ந்தார்களே தவிர ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வழிதெரியாமல் தவித்தார்கள். மாநில அரசு, மாநகராட்சி நிர்வாகம் இரண்டும் உணவு பொட்டலம் வழங்கும் உள்ளூர் நிவாரணம் செய்து பார்த்து ஓய்ந்தன. ஒரே வாரத்தில் 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்கள், 25 லட்சம் பேர், பல நிலைகளில் பாதிப்புக்கு உள்ளானார்கள்!

வீட்டைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. காரணம், வீட்டுக்குள் தண்ணீர். (மழைத் தண்ணீர், தன்னுடன் ஏரித் தண்ணீரையும் அழைத்துவந்திருந்தது) உயிர் பாதுகாப்புக்காக மின்சார சப்ளை நிறுத்தப்பட்டிருந்ததால் மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி குளியல் முதலிய எதுவும் இல்லாமல் இன்னும் பல லட்சம் பேர் தவிக்கத் தொடங்கினார்கள். சாலைகள் எல்லாம் அடையாறு கூவம் நதிகளின் கிளைகளாக மாறிவிட்டதால் சென்னைக்குள் வந்து பெட்ரோல் டீசல் சப்ளை செய்யும் 500 சொச்சம் லாரிகளில் வெறும் 50 மட்டுமே உள் நுழைய முடிந்ததால் பெட்ரோல் தட்டுப்பாடு. அதனால் போக்குவரத்து முடக்கம். அதேபோல காய்கறிகள், பால் கொண்டுவரும் லாரிகளும் வரமுடியாமல் போனதால் அவற்றின் விலைகளும் ஏகத்துக்கு எகிறின. கூடுதல் செலவாயிற்றே என்று ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போனால் ‘பழுது’ என்ற பலகை பல்லிளித்தது.

வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஏராளமானவர்கள் உள்ளூரிலேயே வீடு இருக்க, ஹோட்டல்களில் ரூம் எடுத்து குடும்பத்தோடு குடியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. முடிந்தவர்கள் அப்படி செய்தார்கள். இயலாதவர்களுக்கு மாநகராட்சி பள்ளிகளும் கல்யாண மண்டபங்களும் புகலிடங்களாக மாறின.

தமிழகத்தின் பரிதவிப்பை பார்த்துக்கொண்டு மத்திய அரசு சும்மா இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளை வலிந்து இழுத்து நிவாரணப் பணி திட்டமிடலில் கைகோர்க்கச் செய்தார்கள். காரணம், மத்திய அரசின் அணுகுமுறை அப்படி. அதிகாரிகள் மட்டுமல்ல மத்திய அமைச்சர் ஒவ்வொருவரும் தமது துறை மூலம் தமிழகத்திற்கு எந்தவிதத்தில் நிவாரணம் கிடைக்க வழி செய்ய முடியும் என்று யோசித்து திட்டமிட்டு களம் இறங்கினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி எல்லா விவிஐபிகளையும் போல ஹெலிகாப்டரில் பறந்து வெள்ளச் சேதத்தைப் பார்த்துவிட்டு, ஆவன செய்வோம் என்று சொல்லுவதற்கு அவசியம் இல்லாமல் போயிற்று. அந்த அளவுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஆவன செய்யத் தொடங்கி இருந்தன. உதாரணமாக தரைப்படை, விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் நிவாரண படை என எல்லா அமைப்புகளும் மாநில அரசின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு வந்தது போல சென்னையின் வீதிகளில் சூழ்ந்திருந்த ஆள் மூழ்கும் தண்ணீரில் இறங்கிவிட்டன. முதல்வர் ஜெயலலிதா ராணுவத்தினரின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகவேண்டும் என்று சொன்ன விநாடியில் இருமடங்கு ஆக்கப்பட்டது. ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு மத்திய அரசின் குறிப்பு அப்படி. மத்திய மின்சார துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் ஏற்பாட்டைச் செய்துவிட்டு டி.வி. சேனல் காமிரா முன் அறிவிக்கவும் செய்தார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு லட்சக்கணக்கான பாட்டில்கள் குடிநீரை சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு பிறகு டிவி சேனல்களுக்கு செய்தி சொன்னார்.

தேசம் தன்னுடன்தான் இருக்கிறது என்ற உணர்வு வரப்பெற்ற சென்னைவாசி, பிரதமர் மோடி சொன்னதுபோல ‘இந்த துயரத்தை எல்லாம் தாங்கி தலைநிமிர’ தொடங்கினார்.pic_page_8_1

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மட்டுமல்ல, மாநில அரசின் அமைச்சர்கள் அனைவருமே வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதிசெய்த வண்ணம் காட்சியளித்தார்கள்.

அரசுகள் மட்டுமல்ல, மக்களே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிலிருந்தும் பலவிதங்களில் உதவிக்கரம் நீட்டினார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப உணவுப் பொட்டலங்களாகவும் உடைகளாகவும் எடுத்துக்கொண்டுபோய் தன்னார்வ நிறுவனங்கள் நடத்துகிற நிவாரண பண்டங்கள் சேகரிப்பு மையங்களில் குவித்தார்கள். தண்ணீர் நோய்த் தொற்று ஆபத்து காத்திருப்பதால் மற்ற மாவட்டங்களின் அரசு டாக்டர்கள் சென்னையில் நிவாரணப் பணிக்கு வரவேண்டும் என்று ஒரு சாதாரண சுற்றறிக்கைக்கு கிடைத்த அபாரமான எதிர்வினையைச் சொல்லவேண்டும். மதுரை மாவட்டத்திலிருந்து மட்டும் 60 டாக்டர்கள் முன் வந்தார்கள். அவர்களில் 35 பேர் பெண்கள். அனைவரும் சென்னைக்கு வந்துசேர்ந்தாயிற்று. பல மாவட்டங்களில் இளைஞர் குழுக்கள் தாமாக முன்வந்து தன்னார்வத் தொண்டு அமைப்புகளோடு சேர்ந்து நிவாரணப் பண்டங்கள் சேகரிப்பதிலும் நிவாரணப் பணியிலும் இறங்கியிருப்பதாக பல மாவட்டங்களிலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க ஸ்வயம்சேவகர்கள் சென்னையின் வெள்ள நிவாரணப் பணியில் செய்துகாட்டிய சாதனைகள் அமைந்தன. மொத்த மாநகரத்தையும் 15 மண்டலங்களாக பிரித்துக்கொண்டோம். ஒவ்வொரு மண்டலத்திலும் நிவாரண மையங்கள், ஸ்வயம்சேவகர்களின் அணி ஆகியவற்றை உருவாக்கினோம். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நிவாரண பொருள்களை சேகரித்தோம். விநியோகித்தோம்” என்று கூறினார் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வடதமிழக சேவா பொறுப்பாளர் ராம. ராஜசேகர்.

pic_page_7ராணுவமோ, போலீஸோ, பேரிடர் நிவாரணப் படையோ சென்னைக்குள் வருவதற்கு முன்பே ஸ்வயம்சேவகர்கள் வில்லிவாக்கம், தாம்பரம் பகுதிகளில் காலி டிரம்களை பலகையால் இணைத்து அவற்றின் மீது சமைத்த உணவை வைத்து இடுப்பளவு தண்ணீரில் எடுத்துச் சென்று வீடுகளின் கதவுகளைத் தட்டி விநியோகித்தபோது சென்னை மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியை சொல்லவேண்டும். பல மண்டலங்களில் ஆர்.எஸ்.எஸ். அன்பர்களும் சேவாபாரதி தொண்டர்களும் வீடு இழந்த மக்களுக்கு உடனடி தேவையான மாற்று உடை செட்டுகளை வழங்கினார்கள். அந்த செட்டுகளில் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சானிட்டரி நேப்கின், பனியன்-ஜட்டி உள்ளிட்ட உள்ளாடைகள் என யோசித்து யோசித்து நிவாரணப் பண்டங்களை சேகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மழை பாதிக்காத பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் லாரி லாரியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஹிந்து அமைப்புகளின் சேவா கேந்திரமான ‘சேவா’ பலமாடி கட்டிடத்தின் எல்லா தளங்களிலும் நவம்பர் முதல் வாரத்தில் வந்து குவிந்தன. அனைத்தும் அந்த மாவட்டங்களிலுள்ள ஸ்வயம்சேவகர்களின் பரிவு நிறைந்த முனைப்பால் சேர்ந்த பொருட்கள்.

இதற்கிடையில் பல மாநிலங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். அன்பர்களின் முயற்சியால் சென்னை சேவாபாரதிக்கு காசோலைகளும், வரைவோலைகளும் வந்துசேரத் தொடங்கிவிட்டன. கேரள மாநில ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் மாநிலத்தில் உள்ள சுமார் 5,000 ஷாகாக்களில் சென்னை வெள்ள நிவாரணத்துக்காக நன்கொடை சேகரித்து அனுப்ப தீர்மானித்தது நன்கொடை சேகரிப்பு முயற்சியில் ஒரு புது மைல்கல்.

பாரதத்தின் நான்கு பெருநகரங்களில் ஒன்றான சென்னை தண்ணீரில் தவிப்பது பற்றி அவரவர் நாடுகளிலிருந்தபடி கவலையுடன் நிவாரணத்துக்காக நன்கொடைகள் அனுப்பும் ஹிந்துக்கள் எண்ணற்றவர்கள்.