எஸ்ஐ வில்சன்.. பதுங்கியிருந்த ரபீக்.. மடக்கிய போலீஸ்

குமரி: சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் உடம்பில் 6 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாம்.. கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் வில்சனை கொன்ற 2 பேரில் ஒருவரான ரபீக் என்ற கொலையாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இதை தவிர பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குண்டுகளும், வில்சன் உடம்பை துளைத்த குண்டுகளும் ஒத்து போகின்றன என்ற பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளதால் வில்சன் கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது.

கன்னியாகுமரி, களியக்காவிளை செக் போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்ஐ வில்சன் நேற்று முன்தினம் இரவு 2 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்கார்பியோ காரில் வந்த 2 பேர் துப்பாக்கியால் 4 முறை வில்சனை சுட்டுள்ளனர்.

துப்பாக்கியால் மார்பு, வயிறு, தொடை ஆகிய 3 இடங்களில் குண்டடி பட்ட நிலையில் வில்சன் உடம்பில் கத்திகுத்து காயங்களும் இருந்தன.. இடுப்பில் தான் ஆழமான கத்தி குத்து காயம் இருந்தது என்கிறது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்… தொடை, கை, கால் உட்பட உடலில் 5 இடங்களில் கத்தியால் கிழிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இது கேரள பயங்கரவாதிகளின் வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. எஸ்பி ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாத் உள்ளிட்ட கன்னியாகுமரி போலீசார் இது சம்பந்தமாக 3-வது நாள் விசாரணையை மிக தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.

தாக்குதல்

குறிப்பாக, பெங்களூரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை தமிழக கியூ பிரிவு உளவுத்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் என தமிழக போலீசார், தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.. அதனால், நம் போலீசாரை அச்சுறுத்தும் விதமாககூட, இந்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இப்படி ஒரு தாக்குதலை நடத்தியிருக்கலாமோ என்ற கோணத்தில்தான் முதல் விசாரணையே ஆரம்பமானது.

குல்லா

வில்சனை கொன்ற 2 பேரும் எதிரே உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்து தப்பித்து சென்றுள்ளனர்.. தலையில் குல்லா அணிந்து பள்ளிவாசலுக்கு நுழைந்து தப்பி செல்லும் வீடியோவும் நேற்று போலீசார் வெளியிட்டனர். இந்த கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் என்றும் அறிவித்தனர். இவர்கள் 2 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் கேரளாவுக்கு தப்பி சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானதால், இவர்களை டிபடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிபிக்கள்

இவர்களை பிடிக்க, தமிழக டிஜிபியும், கேரள டிஜிபியுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கேரள டிஜிபி போலோநாத் பேசும்போது, இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் பூந்துறையில் ரஃபீக் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவித்தால் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

3 பேரிடம் விசாரணை

பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், வில்சன் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள், பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்திப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பெங்களூருவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில், கைதான இந்த பேரையும் இன்று கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர்.

வில்சனின் பரிதாப மரணம்

இந்த அதிர்ச்சி போதாது என்று, இதே குமரி மாவட்டம், இரணியலில் நேற்றிரவு நைட் டியூட்டிக்கு சென்ற போலீசார் ரெஜி, ஐயப்பதாஸ் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. போலீசாரை தாக்கிய அருண், சுனில்குமார், ரமேஷ், தினேஷ், அஜித் ஆகியோரையும் போலீஸ் தேடி வருகிறது. இன்னும் 5 மாதத்தில் ரிடையர் ஆக இருந்தாராம் வில்சன்.. இரண்டு மகள்களுடன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த வில்சனின் முடிவு இவ்வளவு பரிதாபத்தில் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை..