சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்துக்கு 1 கோடி நிவாரணம் – தமிழக அரசு

தீவிரவாதிகளுக்கு தொடர்புடையவர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி – களியக்காவிளை அருகே சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று முன் தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய இரு குற்றவாளிகளான தவுபீக், ஷமீம் ஆகியோரின் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக – கேரள மாநிலங்களை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து பணியில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட எஸ்ஐ வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் மற்றும் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்கும் என நேற்று முதல்வர் பழனிசாமி சட்ட மன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் வில்சன் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக வில்சன் கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு கன்னியாகுமரி போலீஸார் 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் கேரள மாநில டிஜிபி லோக்நாத், குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தால் இருவரது தலைக்கும் தலா ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.