எம்.எஸ்.சுப்புலட்சுமி

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனப்படும் எம்.எஸ் சுப்புலட்சுமி 1916ல் மதுரையில் பிறந்தவர். தன் தாயிடமிருந்து இசையை கற்ற அவர் 10 வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடினார். மதுரை சீனிவாச ஐயர், மாயவரம் வி.வி.கிருஷ்ணய்யர், செம்மங்குடி சீனிவாசய்யர் ஆகியோரிடமும் பாட்டு கற்றார்.

மீரா உட்பட நான்கு திரைப்படங்களில் நடித்தார். அவரது கணவர் சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இருவரும் காந்திஜியை சந்தித்தனர். அதன்பின், கஸ்தூரிபாய் நினைவு அறக்கட்டளைக்காக எம்.எஸ். ஐந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி  சுவாமிகள் எழுதிய பாடல்களையும், ராஜாஜி எழுதிய பாடல்களையும் இவர்தான் பாடினார். கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்தவர் இவர். பாரத ரத்னா, பத்ம பூஷன் என அவர் பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது. தனக்கு ராயல்டியாக கிடைக்கும் பணம் அனைத்தும் வேத பாடசாலைகள் உட்பட பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.