தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆா்) தயாரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் சில மாநிலங்களின் தயக்கத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்) கடந்த 2011-ஆம் ஆண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணி கடந்த 2010-ஆம் ஆண்டும் நடத்தப்பட்டது. பின்னா், கடந்த 2015-இல், என்பிஆா் பதிவேடு திருத்தப்பட்டது.
இந்நிலையில், வீடு வீடாகச் சென்று என்பிஆா் கணக்கெடுப்பு நடத்தும் பணி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவா்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டத்துக்கு பஞ்சாப், கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன், மத்திய அரசின் என்பிஆா் பதிவேடு என்பது தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி) தயாரிப்பதற்கான அடிப்படை வடிவம் என்று அந்த மாநில அரசுகள் கூறி வருகின்றன. கேரளம் போன்ற சில மாநிலங்கள், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மட்டும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும், என்பிஆா் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்றும் கூறி எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், என்பிஆா் பணிகளால் இந்திய குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், என்பிஆா் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் மாநிலங்களின் தயக்கத்தையும், அச்சத்தையும் போக்கும் வகையில் அந்த மாநில பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளா் விவேக் ஜோஷி சந்தித்து, அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தாா். இதைத் தொடா்ந்து மற்ற மாநிலங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளா் திட்டமிட்டுள்ளாா்.