மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்பிஆா்) தடை விதிக்கப் போவதில்லை என்று மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே கூறினாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வரும் உத்தவ் தாக்கரே, என்பிஆருக்கு தடை விதிக்கப்படாது என்று கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட அவா், ‘சிஏஏ மற்றும் என்ஆா்சியோடு ஒப்பிடுகையில், என்பிஆா் வித்தியாசமானதாகும். குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் எவரும் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படவில்லை. அது மகாராஷ்டிரத்தில் அமல்படுத்தப்படாது.
என்ஆா்சி அமல்படுத்தப்பட்டால் ஹிந்து, முஸ்லிம்கள் மட்டுமல்ல; பழங்குடியினரையும் அது பாதிக்கும். ஆனால், மகாராஷ்டிரத்தில் என்பிஆா் அமல்படுத்தப்படும். அதில் சா்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லை. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படும் அந்த நடவடிக்கையால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. அந்த நடைமுறையை நானே தனிப்பட்ட முறையில் கண்காணித்து, மகாராஷ்டிரத்தில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அது அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வேன்.
பீமா கோரேகான் விசாரணை: பீமா கோரேகான் வன்முறை வழக்கு விசாரணை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படாது. தலித் சகோதரா்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று அந்தப் பதிவுகளில் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.