என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே குடியுரிமை திருத்த சட்டத்தை கட்சிகள் எதிர்க்கின்றன

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைமையகத்தில் (12.03.24) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் என்னவென்றே தெரியாமல் அவர்களாக ஊகித்துக் கொண்டு, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. 1950-ம் ஆண்டு ஜன.26 முதல் 1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 2003-ம் ஆண்டு வரை, தந்தை, தாய் இருவரும் இந்தியாவில் பிறந்திருந்தால் மகன் அல்லது மகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. 2003-ம் ஆண்டுக்குப் பின் தந்தை, தாய் இருவரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் மற்றொருவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்திருக்கக் கூடாது என்னும் விதிமுறை பின்பற்றப்பட்டது.
இவ்வாறு 3 முறை குடியுரிமை வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் சட்டம் திருத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 அண்டை நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துவிட்டன.
அங்கு மதம் காரணமாக சலுகைகள் மறுக்கப்பட்ட பிற மதத்தினர் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தியாவுக்குள் வந்துவிட்டனர். அவர்கள் அகதி மறுவாழ்வு முகாமில் உள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தால் இயற்கையாகவே குடியுரிமை கிடைக்கும். தற்போதைய திருத்தச் சட்டத்தின்படி, 2014-ம் ஆண்டு டிச.31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர், 5 ஆண்டுகள் வசித்திருந்தாலே குடியுரிமை கிடைக்கும்.
இது குடியுரிமையை கொடுப்பதற்கான சட்டமே தவிர, குடியுரிமையைப் பறிப்பதற்கான சட்டம் அல்ல. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைக் குழப்புவதை விட்டுவிட்டு, எங்கு தவறு நடந்துள்ளது என சொல்ல வேண்டும். இதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என கூற முதல்வருக்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் கூறுவது, முதல்வர் எடுத்த சத்திய பிரமாணத்துக்கு எதிரானது. இலங்கை அகதிகள் அனைவருக்கும் விரைவாக குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பதே பாஜக நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.