அதீத மழையாலும் மழையின்மையாலும் தமிழகம் அடுத்தடுத்து இன்னலை எதிர்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் பாய்ந்தோடும் நதிகள்தான் தமிழ்நாட்டுக்கும் தண்ணீரை தரவேண்டி இருக்கிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இணக்கமான தீர்வு நழுவிக்கொண்டே இருக்கிறது. தாமிரபரணி மட்டும்தான் நெல்லை மாவட்ட மலைப் பகுதியில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதன்படி விவசாயிகள் நிலவரி செலுத்தவேண்டியதில்லை. நெல் சாகுபடி செய்த விவசாயிகள் வெவ்வேறு மாவட்டங்களில் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு தொகைகளை இழப்பீடாகப் பெறுகின்றனர். ஓர் ஏக்கர் சோளப் பயிருக்கு ரூ. 20,000, பயறு வகைகளுக்கு ரூ. 12,000, கரும்புக்கு ரூ. 45,000, மஞ்சளுக்கு ரூ. 50,000 வரை இழப்பீடு பெற முடியும்.
இந்த இழப்பீட்டுத் தொகையை உரிய பயனாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.3,400 கோடி ஏரிகள் பாசன வாய்க்கால்கள் தூர்வாறப்படும். குளங்கள் சீரமைக்கப்படும். இதில் விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். வறட்சியால் வேலைவாய்ப்பு இழந்த விவசாய தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த 100 நாட்கள் பணி வரம்பு 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஏட்டளவில் வெகு சிறப்பாக உள்ளது. ஆனால் நடைமுறையில் இது சிறப்பாக உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பல பத்தாண்டுகளுக்கு முன் சென்னை மாநகராட்சியை மஸ்டர் ரோல் முறைகேடு உலுக்கியது. போலி பட்டியல் தயாரிக்கப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கவுன்சிலர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உச்சகட்டமாக சென்னை மாநகராட்சியே கலைக்கப்பட்டது.
மஸ்டர் ரோல் முறைகேட்டுக்கு எந்த வகையில் இடம் கொடுக்கக்கூடாது என்பதை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்ற பணிகள், சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உபயோகமாக இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பல்வேறு இடங்களில் பெயர் அளவுக்கு வேலைசெய்துவிட்டு கூலியை வாங்கிக்கொள்கிறார்கள். வங்கிக் கணக்கு வாயிலாக சம்பளம் கொடுப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதே நேரத்தில் வேலையின் அளவை துல்லியமான தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இதைச் செய்யத் தவறினால் மற்றொரு மஸ்டர் ரோல் முறைகேடு வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை. எனவே வேலை நாட்கள் அதிகரிப்பை செம்மைப்படுத்துவதில் கவனமும் முனைப்பும் செலுத்த வேண்டும்.