ஊக்கத்திற்கு ஏது முடக்கம் ?

இரண்டு நாட்களுக்கு முன்பு, 24 ஏப்ரல் வெள்ளிக்கிழமை தேசிய பஞ்சாயத் ராஜ் நாள் கொண்டாடப்பட்டது. அந்த  நிகழ்வில் பாரதப் பிரதமர் கிராமப் பஞ்சாயத் தலைவர்களுடன் காணொளிக் காட்சியில் உரையாடினார். இந்த விழாவில் ஈ -கிராம் ஸ்வராஜ் என்றும் சுவாமித்வா யோஜனா என்றும் இரண்டு வலை இணைய தளங்களைத் (Portals) தொடங்கினார். இவை பாரத கிராமங்களில் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்த உதவும்.

மேலும் இது கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்த உதவுகிறது. திட்ட துவக்கம், செயல்பாடு, முன்னேற்றம்.   வரவு செலவு விவரங்கள் எல்லாம் உடனுக்குடன் நாடு முழுவதுக்கும் பொதுவான ஒரே தகவல் தளத்தில் – ஒரே விதமான மென்பொருள் செயலியின் வாயிலாக பதிவேற்றம் செய்ய பயன்படும்.  ஊரக நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மேம்படும். ஒவ்வொரு குடிமகனும் தனது பகுதியில் கிராம நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று  கைபபேசியிலேயே தெரிந்து கொள்ள முடியும். நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது மேம்படும்.

6 மாநிலங்களில் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட சுவாமித்வா திட்டம் கிராமப்புற மக்கள் வசிக்கும்நிலங்களை ட்ரோன்கள் மூலமாகவும் சமீபத்திய கணக்கெடுப்பு முறைகளைப் பயன்படுத்தியும் வரைபடப்படுத்த- ஆவணப் படுத்த உதவுகிறது. இத்திட்டம் நெறிப்படுத்தப்பட்ட திட்டமிடல், வருவாய் வசூல் மற்றும் கிராமப்புறங்களில் சொத்துரிமை குறித்து தெளிவை வழங்கும். நில உரிமையாளர்களின் கடன் விண்ணப்பங்களை வங்கிகள் பரிசீலனை செய்வது எளிதாகும். சொத்துரிமை சச்சரவுகள் குறையும்.

இந்த நிகழ்வை தொலைக் காட்சியில் காணும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா? பல கிராமத் தலைவர்கள் இளைஞர்கள் – இளைஞிகள். முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள். அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இருக்கலாம், மத்திய – மாநில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக இருக்கலாம் அவர்கள் குரலில் இருந்த தெளிவும் உற்சாகமும் நம்பிக்கையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஊக்கத்துடன் செயல்படும் தலைவர்கள் சோதனைகளைக் கண்டு கலங்குவதில்லை, முடங்குவதில்லை. அவர்களுக்கு இன்றைய உடனடி பிரச்சினைகளிலும் கண் இருக்கும், அடுத்த தலைமுறையின் நலனிலும் கவனம் இருக்கும்.

எம்ஆர்.ஜம்புநாதன்

One thought on “ஊக்கத்திற்கு ஏது முடக்கம் ?

  1. அ௫மை. ௨ண்மையான தலைவனுக்கு இலக்கணம் நமது மோடிஜி அவர்கள்.
    அவர் நீடூழி வாழ ஆண்டவரை பிரார்த்திக்கிரேன். இந்தியர்கள் அனைவரும் தம் வாழ்நாளில் ஒரு நாள் அவருக்கு கொடுத்தால் போதும். என் பிரார்த்தனை நிறைவேறும்.

    நான் தயார் இறைவா. நீங்கள் தயாரா.

Comments are closed.