உ.பி.,யில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டாளர் கேணல் சிவ் பிரதாப் சிங் கூறியதாவது: உ.பி., மாநிலம் புலந்த்செகரில், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளி துவங்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், ‘ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்’ என அழைக்கப்படும். பள்ளியின் கட்டடம் தயாராக உள்ள நிலையில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும்.
பள்ளியில், என்.டி.ஏ, கடற்படை அகாடமி மற்றும் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள். பிப்.,23 வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். மார்ச் 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும். பின் நேர்காணல் நடத்தப்பட்டு, ஏப்.,6 முதல் வகுப்புகள் நடைபெறும். போரில் வீர மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்படும். தியாகிகளின் சலுகையாக வயது தளர்வு இருக்கும். வேறு இட ஒதுக்கீடு கிடையாது.
உண்டு உறைவிட பள்ளியாக மட்டுமே செயல்படும் இப்பள்ளியில், முதல்கட்டமாக 6ம் வகுப்பில் 160 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும். மாணவர்களுக்கு கல்வி, தார்மீக, ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்குவதே பள்ளியின் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.