உலக தரத்தில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துகிறார் பிரதமர் மோடி

”பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நாட்டின் அனைத்து உள்கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன என, மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். சென்னை தரமணியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தமிழக உள்கட்டமைப்பு உச்சி மாநாடு – 2023 நேற்று நடந்தது. மாநாட்டில், மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் சாலை, ரயில், துறைமுகம் என, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மிக பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் நோக்கம். பிரதமரின் ‘கதி சக்தி’ எனப்படும் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ், முக்கிய திட்டங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்க, 16 அமைச்சகங்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அத்திட்டத்திற்கு, 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் சாலை, விமானம், கடல் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்து உள்கட்டமைப்புகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் உள்கட்டமைப்புகளை மத்திய அரசு அதிகளவில் மேம்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் நான்கு வழித்தடங்களில், ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயண நேரம் குறைந்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், ஐ.ஜி – 3., இன்ப்ரா நிறுவனத்தின் இயக்குனருமான ருக்மினி தியாகராஜன் பேசியதாவது: தமிழக அரசு, வரும் 2030க்குள், 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரத்தை அடைய குறிக்கோளாக கொண்டுள்ளது. மத்திய அரசு, 2047க்குள் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற திட்டமிட்டுள்ளது. அவற்றை அடைய தேவையான விஷயங்கள் மாநாட்டில் பேசப்படும். தமிழகம், இந்தியாவில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகம், இரண்டாவது இடத்தில் உள்ளது.பல வளங்களை உடைய தமிழகத்தில், திறன்மிக்க தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். ‘டேட்டா சென்டர்ஸ்’ எனப்படும் தரவு மையங்களுக்கு அதிக தேவை உள்ளது. அந்த மையங்களை, சென்னையில் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.