உலகத் தரம் வாய்ந்த 20 பல்கலைக் கழகங்கள் திட்டம் – தரம்: தனியாராலும் சாத்தியம்

பண்டிட் மதன் மோகன் மாளவியா 1904ம் ஆண்டு பனாரஸ் மின்ட் ஹவுசில் ஒரு பல்கலைக் கழகம் துவங்கலாம் என்று தெரிவித்தபோது காசி அரசர் உட்பட அனைவரும் அவருடைய இந்த தொலைநோக்குத் திட்டத்தைப் பாராட்டினர். அப்போது இந்தத் திட்டத்திற்கு எப்படி செலவு செய்வது என்று அவரிடம் யாரும் கேட்கவில்லை.

‘பிச்சைக்காரர்களின் இளவரசர்’ என்று அழைக்கப்பட்ட மாளவியா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இத்திட்டத்திற்கான நிதி திரட்டுதலில் ஈடுபட்டார். நாட்டை வடிவமைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பல்கலைக் கழகமாக மாளவியாவின் விடா முயற்சியால் 1915ம் ஆண்டு ‘பனாரஸ் ஹிந்து யூனிவர்சிட்டி’ என்ற பெயரில் இப்பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் தற்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாக, உலகளாவிய பொருளாதார அறிவை மேம்படுத்தும் மையமாக விளங்குகிறது. சரியாக 102 ஆண்டுகளுக்கு பின், தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 20 கல்வி நிறுவனங்கள் (புதிதாகவோ அல்லது தற்போது உள்ள நிறுவனங்கள் கண்டறியப்பட்டோ) தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக (Institutions of Eminence  – IoE)  உயர்த்தப்பட உள்ளன. இது குறித்து எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், தற்போது 20 மாளவியாக்கள் இருந்தால் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்க முடியுமா என்பதுதான். இக்கேள்விகளுக்கான விடையை காணலாம்.

உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி மையங்களை ஏற்படுத்தும் மனிதவள மேம்பாட்டுத்துறையின் திட்டம் போற்றப்பட வேண்டியதுதான். இது உயர்கல்வித் துறையில் தற்போதைய உலகளாவிய போக்கை ஒத்து இருக்கிறது.

பல்கலைக் கழக மானியக்குழு இத்திட்டத்தின் செயல்முறை, நடைமுறை, கால அளவு, நிதி ஒதுக்கீடு, நோக்கம் போன்றவற்றை உலக அளவில் கல்வியாளர்களும் திட்ட வல்லுனர்களும் வகுத்துள்ள கொள்கைகளுக்கு இணங்க செயல்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற திட்டங்கள் உலக அளவில் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க, ஐரோப்பிய, ரஷிய, ஜப்பானிய மாதிரிகளில் உள்ள பொதுவானவற்றை பல்கலைக் கழக மானியக்குழு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா, ரஷியா (குறைந்த அளவு மட்டும்) போன்ற நாடுகளில் அரசு, தனியார் பல்கலைக் கழகங்கள் இணைந்த கல்வி முறை உள்ளது. எல்லாவற்றிற்கும் ஏற்ற ஒரே மாதிரி பல்கலைக் கழகத்தை நிறுவும் திட்டம் எந்த அளவுக்கு உலகளாவிய போட்டிக்கு உகந்ததாக அமையும்? இந்த கேள்விக்கு விடை தர முடியாதுதான். இருப்பினும் இந்த பிரச்சினையில் சில பொதுவான இழைகள் உள்ளன.

இதுபோன்ற முயற்சிக்கு முக்கிய காரணம், உலகப் பல்கலைக் கழகங்களின் வரிசையில் இடம் பெறுவது ஆகும். இந்த தர வரிசையில் இடம் பெறுவதற்கு முக்கியமான காரணிகள் முனைப்பான கொள்கை தயாரித்தல், பொருளாதார வசதி ஆகியவை. இந்தியாவில், இத்தகைய திட்டத்திற்கு பத்து அரசு நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுக் கால இடைவெளியில் ரூபாய் 10,000 கோடியை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நிறுவனங்களுக்குப் போதுமானதாக இருக்குமா என்று கூறுவது கடினம்.

அப்படியிருந்தால் அந்த பட்ஜெட் தொகையை, இருக்கும் ஓட்டைகளை அடைப்பதற்கு செலவிடாமல், அதன் மேன்மையை ஊக்குவிக்க பயன்படுத்தபட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அரசு நிறுவனங்களுக்கு மட்டும் பண உதவி என்ற முடிவு தகுதியுடைய தனியார் நிறுவனங்களை பாதிக்கிறது.

அரசு, தனியார் நிறுவனங்களிடையே தகுதி அடிப்படையில் காட்டப்படும் பாரபட்சமான போக்கு நீக்கப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு உதவித்தொகை அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களை தகுதி அடிப்படை என்ற பெயரில் குறிப்பிட்டு தற்போதைய திட்டம் செயல்படுகிறது. நிறுவனங்களின் தகுதியை நிர்ணயிக்கும் முறையில் பெரிய அளவிலான மாற்றம் தேவை.

புதிய தனியார் நிறுவனங்களை நடத்தும் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,000 கோடியாகவும், நடப்பில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3,000 கோடியாகவும் இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத நிர்ணயமாக இருப்பதால், பல தகுதியான தனியார் நிறுவனங்கள் இந்த புதிய IoE விதிமுறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

பெருநிறுவனங்கள் தாங்கள் பல்கலைக் கழகத்திற்கு பக்கபலமாக இருப்போம் என்ற ஒப்புதல் கடிதத்தை அளித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், தகுதியுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பின்தள்ளப்படுவார்கள். மாளவியா போன்ற பெரியவர்கள் இன்று இருந்தால் அவர்களால் ‘பனாரஸ் ஹிண்டு பல்கலைக்கழகம்’ போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. முடியும் என்று நம்புவோமாக!

(கட்டுரையாளர்: தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழக பேராசிரியர்; கட்டுரை, தினமணியில் வெளியானதன் சில பகுதிகள்)

 

 

 

 

தரம் வேண்டுமா, தலையீடு கூடாது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) முழுக்க முழுக்க விஞ்ஞானிகள் கையில் உள்ளது.  வெளி தலையீடே கிடையாது. எனவேதான் அது அரும்பெரும் சாதனைகளை படைக்க முடிகிறது. மங்கள்யான் அபார வெற்றி பெற்றதற்கும் அதுதான் காரணம். பாரத தேசத்தில் கல்வியும் அதுபோல வெளியார் தலையீடு இல்லாமல் விளங்க வேண்டும். கல்வியிலிருந்து அரசு முற்றிலுமாக வெளியேற வேண்டும். தென் கொரியாவும் பின்லாந்தும் உலகில் கல்வியில் தலைசிறந்த நாடுகள் என்று புகழ் பெற்றுள்ளன. அங்கு மாணவர் என்ன படிக்க வேண்டும், என்ன படிக்கக்கூடாது என்பதை அரசு மட்டுமல்ல, ஆசிரியர் கூட தீர்மானிப்பதில்லை; மாணவர் தாமாக தீர்மானிக்கிறார். எனவேதான் அந்த நாடுகள் எவ்வளவு சிறியவையாக இருந்தாலும் தரமான கல்வியில் கொடிகட்டிப் பறக்கின்றன.

(டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பாரதிய சிக்ஷண் மண்டல் அகில பாரத அமைப்புச் செயலர் முகுல் கானிட்கர் தெரிவித்த கருத்து)