உணவிலும் உள்ளது முன்னுதாரணம்

பூனாவில் ஒருமுறை சங்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது. வழக்கம்போல் குருஜி அந்த முகாமிற்கு வந்திருந்தார். பல சங்க அதிகாரிகளும் குருஜியை சந்திக்க அங்கு வந்திருந்தனர். வழக்கம்போல் பல குழுக்களாக ஸ்வயம்சேவகர்கள் பிரிந்து வெவ்வேறு வரிசைகளில் உணவு பரிமாறி வந்தனர்.

குருஜி தன்னுடைய வரிசையில் அமர்ந்திருக்கும்போது ஒரு ஸ்வயம்சேவகர் மட்டும் உணவு பரிமாறாமல் தனியாக ஒதுங்கி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். குருஜி அவரிடம் சென்று, ‘‘ஏன் எதையும் பரிமாறாமல் நிற்கிறாய்?’’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்கு பரிமாற எனக்கு வெட்கமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது’’ என்றார். ஏனென்று கேட்டார் குருஜி. ‘‘நான் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவன். உங்களைப் போன்ற புனிதர்களுக்கு நான் எப்படி பரிமாற முடியும்?’’ என்று அவர் பதிலளித்தார்.

பிறகு குருஜி அவரது கையைப் பிடித்து, பரிமாற வைக்கப்பட்டிருந்த உணவுப் பாத்திரத்திடம் அழைத்துச் சென்று ஜிலேபியை வைத்திருந்த  (சிறப்பாக அன்றைய தினத்திற்காக செய்யப்பட்டது) பாத்திரத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தார். தன்னுடனே தன் இருக்கைக்கு அவரை அழைத்து வந்து ஜிலேபியை முதலில் தனக்கு பரிமாறிவிட்டு பிறகு வரிசையில் உள்ள அனைவருக்கும் பரிமாறும்படி சொன்னார். அந்த ஸ்வயம்சேவகர் குருஜியின் கட்டளைப்படியே நடந்தார். அவரது தயக்கம் போய்விட்டது. மற்ற உணவுப் பொருள்களையும் வரிசையில் உள்ளவர்களுக்கு இயல்பாகப் பரிமாறினார்.

எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராகக் கருதவேண்டும் என்பதை மற்றவர்களுக்கு இதன்மூலம் ஸ்ரீகுருஜி எடுத்துக்காட்டினார். அதேபோல் அந்த ஸ்வயம்சேவகரிடமிருந்து தாழ்வு மனப்பான்மையை இயல்பான வகையில் போக்கினார்.