உடையார்பாளையத்தில் கண்டறியப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான அரிகண்டம் சிலை

அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில், உடையார்பாளையம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில், விஜயநகரப் பேரரசு காலத்து அரிகண்டம் கற்சிலை இருப்பதை கடந்த 6-ம் தேதி கண்டறிந்தனர். இரண்டு அடி உயரம், ஒன்றரை அடி அகலமுடைய இந்த சிலை,இரு கால்களையும் சம நிலையில் முன்வைத்து, நின்ற நிலையில் அமைந்துள்ளது. மேலும், தனது வலதுகையில் வாளால் தன் தலையை அரிவது போலஅமைக்கப்பட்டுள்ளது. உச்சந்தலையில் இடது பக்கம் சாய்ந்தநிலையில் கொண்டை, இடது கையில் வில், கழுத்தில் பதக்கம்,கால் முட்டியில் தண்டி போன்றஆபரணங்களை அணிந்துள்ளதால், இவர் படைத் தலைவராக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
தலைவன் அல்லது மன்னன் போரில் வெற்றி பெற வேண்டி, பெண் தெய்வங்கள் முன்பாக நேர்ந்து கொண்டு, அது நிறைவேறியதும் தன் தலையைத் தானேஅரிந்து உயிர் விடுதல் அரிகண்டமாகும். அதேபோல, ஒன்பது இடங்களில் வெட்டி, உடலை ஒன்பதுதுண்டங்களாக்கி உயிர் துறப்பது நவகண்டம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அரிகண்டம், நவகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி நூல்களில் இடம் பெற்றுள்ளன. இந்த கோயில் வளாகத்தில் காணப்படும் சிலை அமைப்பைப் பார்க்கும்போது 15-ம்நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்தச் சிலைக்கு அருகில் கையில் குத்துவாள் மற்றும் கேடயத்துடன் சுமார் ஒரு அடி அளவில் வீரன் சிலை ஒன்றும் காணப்படுகிறது. இந்த செல்லியம்மன் கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது. இந்த சிலை 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.