உடல் முழுவதும் பச்சை குத்தும் தீவிர பக்தர்கள் ராம்நாமிகள்

ராம்நாமி சமாஜ் 19-ம் நூற்றாண்டு காலத்தில் மத்திய மற்றும் வடக்கு சத்தீஸ்கரில் உருவான அமைப்பு. இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு எதிர்ப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் ராம்நாமிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் உடல்களிலும், முகங் களிலும், மொட்டைத் தலையிலும் ராமரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்கின்றனர். ராம் லல்லா சிலை கும்பாபிஷேக விழா குறித்து முன்னோர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளதை ராம்நாமிகள் நினைவு கூர்கின்றனர்.

காவி உடை அல்லது மொட்டையடித்த தலையுடன் வலம் வரும் ராம்நாமிகள் அனைத்துவடிவத்திலும் ராமரை வணங்குவதை வலியுறுத்துகின்றனர். இருப்பினும், மரபுவழி இந்து மத்திலிருந்து விலகி ஒரு உருவமற்ற தெய்வீக அமைப்பையே அவர்கள் நம்புகிறார்கள். அதன்படியே ஒரே உண்மையான கடவுள் ராமர் என்பதைஅவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். அந்த பக்தியின் வெளிப்பாடாகவே அவர்கள் தங்களது உடல் மற்றும் முகங்களில் ராமரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, வீடு, சுற்றுப்புறம், ஆடைகள் என அனைத்திலும் ராமரின் பெயரை பொறித்து அவர்கள் தீவிர பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.