இஸ்ரேல் – ஈரானில் 18 லட்சம் இந்தியர்கள் பாதுகாக்க அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, நேற்று முன்தினம் பெங்களூரு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ராஜாஜி நகரில் உள்ள ஐ.சி.எஸ்.ஐ., இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆப் இந்தியா எனும் வெவ்வேறு நிறுவனங்களின் செயலர்களுடன் பெங்களூரு கிளை அலுவலகத்தில், ‘உலக நண்பர் இந்தியா’ என்ற தலைப்பில் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சியில் நிறுவன செயலர்களின் பங்கு தனித்துவமானது. உலகின் எந்த பிரச்னையாக இருந்தாலும், சர்வதேச அளவில் எரிவாயு விலை உயர்வு, உணவு பதார்த்தங்களின் விலை உயர்வு ஏற்படும். உலகின் பெரும்பாலான மோதல்களுக்கு, உலக நண்பர் என்பது மட்டுமே தீர்வாக அமையும். அந்த வகையில், சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு கண்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் மோதலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த இரண்டு நாடுகளிலும் 18 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களை பாதுகாப்பது நம் பொறுப்பு. ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்து உள்ளது, காஸாவில் மோதல் தொடர்கிறது.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் நிலைமை மோசமாக உள்ளது. உலகின் 20 நாடுகள், தங்களின் பிரச்னையை பேசி தீர்க்க முடியாத நிலையில் உள்ளன.

இத்தகைய சவால்களை எதிர்கொள்ள அனுபவம் மிகுந்த தலைமை தேவை. பரஸ்பர புரிதலுடன், பேச்சு நடத்த தேவையான வழிகளை பின்பற்ற வேண்டும். ஒருதலைபட்ச முடிவால், தீர்வு கிடைக்காது. ஐ.நா., சபை கூட இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால், வளரும் நாடுகளுக்கான குளோபல் சவுத் என்ற கருத்தை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்கிறது. ஜி – 20 மாநாட்டுக்கு தலைமை வகித்ததன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளோம்.

வளரும் இந்தியாவே நமது இலக்கு, இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதார நாடாக மாறும். அப்போது, அனைத்து துறைகளிலும் நிபுணர்களுக்கான தேவை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார். ஐ.சி.எஸ்.ஐ., பெங்களூரு பிரிவு தலைவர் வெங்கட சுப்பாராவ் கல்வா, செயலர் விஸ்வாஸ் ஹெக்டே உட்பட பலர் பங்கேற்றனர்.