இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து; காங்.,எம்.பி சசி தரூருக்கு கேரளாவில் எதிர்ப்பு

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நடத்திய ஒற்றுமை பேரணியில், காங்., – எம்.பி., சசி தரூர் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கிறது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, இம்மாத துவக்கம் முதல் மோதல் நடக்கிறது. இந்த போரில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, கோழிக்கோடு மாவட்டத்தில் முஸ்லிம் லீக் சார்பில், சமீபத்தில் ஒற்றுமை பேரணி நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய காங்.,- – எம்.பி.,சசி தரூர், ‘கடந்த 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பயங்கரவாத தாக்குதல்’ என தெரிவித்தார். பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்று, இஸ்ரேலுக்கு ஆதரவாக சசி தரூர் கருத்து தெரிவித்ததாக, சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு, ”என் பேச்சின் ஒரு வாக்கியத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தேவையில்லாமல் அவதுாறு பரப்புகின்றனர். நான் எப்போதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உள்ளேன்,” என, சசி தரூர் விளக்கம் அளித்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர், எம்.சுவராஜ் நேற்று கூறியதாவது: சசி தரூர் தெரிவித்த கருத்துகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தான் இருந்தன. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை ஒப்புக்கொள்ள அவர் தவறி விட்டார். முஸ்லிம் லீக் நடத்திய பேரணியை, இஸ்ரேலுக்கு ஆதரவானதாக அவர் மாற்றி விட்டார். இங்கிருந்தபடி, பாலஸ்தீன மக்களை சசி தரூர் காயப்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.