இரட்டைமலை சீனிவாசன்

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர் இரட்டைமலை சீனிவாசன். பட்டியலினத்தவர், கீழ்ஜாதி என்ற ஜாதி பாகுப்பாட்டை முறியடித்து, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். தொழிலால் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், அவர் ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதி, பட்டியலின முன்னேற்ற ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல பரிமாணங்களில் தன் தேசப்பணியை செய்தவர். மகாத்மா காந்தியின் பட்டியல் இனத்தை சார்ந்த நெருங்கிய கூட்டாளி இரட்டைமலை சீனிவாசன் என்று சொன்னால் அது மிகையாகாது.

பாரதத்தில் பட்டியலின இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து வந்த இரட்டமலை சீனிவாசன், தனது கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர், எழுத்தராக நீலகிரியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1890ல் சென்னைக்கு வந்தார். 1891ல் ‘பறையர் மகாசன சபை’ மற்றும் 1893ல்  ‘பறையன்’ என்ற திங்கள் இதழை தோற்றுவித்தார். 1900 ஆம் ஆண்டுவரை அவ்விதழை நடத்திய அவர், அதே ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஒரு மொழிப்பெயர்பாளராக நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்த அவர், 1921ல் மீண்டும் பாரதம் திரும்பினார்.

லண்டனில் 1930, 1931 மற்றும் 1932களில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளின் பட்டியலின மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்டார் இரட்டைமலை சீனிவாசன். பட்டியலின மக்களுக்கு முழு உரிமையைப் பெற்றுத் தர எண்ணிய அவர்கள் இருவரும், அம்மாநாட்டில், பட்டியலின மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும், விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினர்.

‘‘நீ எதில் இருக்கிறாயோ, அதில் இருந்து போராடு. ஒரு மதத்தில் இருக்கும்போது என்ன சலுகையை அனுபவிக்கிறாயோ அந்தச் சலுகையை இன்னொரு மதத்துக்குப்போன பிறகு எதிர்பார்க்காதே!” ‘‘விரோதமும் வெறுப்பும் மமதையும் பாவமானவை’’ என்று சொன்னவர் இரட்டைமலை சீனிவாசன்.

ஜி.எம் சீனு