இன்று தேசிய கல்வி கொள்கை மாநாடு

நாட்டில், 1986ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, தற்போது வரை அமலில் இருந்தது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ‘பள்ளி மற்றும் உயர் கல்வியில், பல்வேறு சீர்திருத்தங்களுடன் உருவாகியுள்ள, புதிய தேசிய கல்விக் கொள்கை, துடிப்பான, சமமான மற்றும் அறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க பாடுபடும் என்பதுடன், நம் நாட்டினை, உலகளாவிய வல்லரசாக மாற்றும் முயற்சியில், நேரடியாக பங்கேற்கும்’ என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘உயர் கல்வியை மாற்றுவதில், தேசிய கல்விக் கொள்கை – 2020ன் பங்கு’ என்ற தலைப்பில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கவர்னர்கள் மாநாட்டினை, மத்திய கல்வி அமைச்சகம், இன்று நடத்துகிறது.இதில், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெறும், இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.