இந்திய கடற்படை பிடித்த 9 கடற்கொள்ளையர்கள் மும்பை போலீஸில் ஒப்படைப்பு

இந்திய பெருங்கடலில் 9 கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த இந்தியக் கடற்படை அவர்களை மும்பை போலீஸிடம் ஒப்படைத்தது.
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஐஎன்எஸ் திரிசூல்மற்றும் ஐஎன்எஸ் சுமேதா மூலம் கடந்த மார்ச் 29-ம் தேதி இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அல்-கம்பர் என்கிற ஈரானிய மீன்பிடி கப்பலையும் அதில் பயணம் செய்த 23 பேர் கொண்டபாகிஸ்தான் குழுவினரையும் 9 பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் குழு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியக் கடற்படையினர் அல்கம்பர் கப்பலையும், 23 பாகிஸ்தானியர்களையும் பத்திரமாக மீட்டனர். 9 கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், “பிடிபட்ட 9 கடற்கொள்ளையர்களுடன் ஐஎன்எஸ் திரிசூல் போர்க்கப்பல் ஏப்ரல் 3-ம் தேதி மும்பை துறைமுகம் வந்தடைந்தது. கடற்சார் கொள்கை எதிர்ப்பு சட்டம் 2022-ன் கீழ் 9 கடற்கொள்ளையர்களும் மும்பை போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய பெருங்கடலுக்கு உட்பட்ட பகுதியில் பயணம் செல்லும் எந்த நாட்டின் வணிகக்கப்பலானாலும் பயணிகளானாலும் அவர்களை இந்திய கடற்படை பாதுகாக்கும்” என்றார்.