இந்தியா 6.7 சதவீத வளர்ச்சியை எட்டும்: சிஐஐ தலைவர்

ந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீதம் முதல் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

2022-23-ம் நிதி ஆண்டின் 4-ம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவரங்களை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, 4-ம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-23 முழு நிதி ஆண்டுக்கான ஜிடிபி 7.2 சதவீதமாக உள்ளது.ரிசர்வ் வங்கி, 2022-23 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.1 சதவீதமாகவும் ஒட்டுமொத்த நிதி ஆண்டு ஜிடிபி 7 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்ததைவிடவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி குறித்து சிஐஐ தலைவர் தினேஷ் கூறுகையில், “ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்றிருக்கும் சூழலில், உலக நாடுகளின் கவனம் இந்தியா மேல் குவிந்துள்ளது. அந்த வகையில் நடப்பு ஆண்டு இந்தியாவுக்கு முக்கியமான ஆண்டாகும். உள்நாட்டின் தொழில் செயல்பாடுகளின் வளர்ச்சி, மத்திய அரசு மூலதன செலவினம் ஆகியவற்றின் காரணமாக 2023-24 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல், பணவீக்கமும் கட்டுக்குள் வரும்என்று தெரிவித்துள்ளார்.