இந்தியாவில் முதலீடு செய்ய சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு

பாங்காக்கில் உள்ள ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலீடு செய்வதற்கு உலக அளவில் மிகவும் அதிக வாய்ப்புள்ள பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தற்போது விளங்குகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறப்பான தருணம். நாடு தற்போது உருமாறிக்கொண்டு இருக்கிறது. வழக்கமான அதிகாரத்துவ முறைகள் ஒழிக்கப்பட்டு விட்டன. முதலீடு மற்றும் எளிதான வர்த்தகத்துக்கு இந்தியாவுக்கு வாருங்கள். புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு இந்தியாவுக்கு வாருங்கள். சிறப்பான சுற்றுலாத்துறை மற்றும் சிறந்த விருந்தோம்பலுக்கு இந்தியாவுக்கு வாருங்கள். உங்களுக்காக இந்தியா இருகரம் விரித்து காத்திருக்கிறது.

இந்தியா தற்போது 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2014-ம் அண்டு எனது அரசு ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 டிரில்லியன் டாலர்கள். முந்தைய 65 ஆண்டுகளில் 2 டிரில்லியன் வளர்ச்சியை எட்டிய இந்தியா, வெறும் 5 ஆண்டுகளில் சுமார் 3 டிரில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 286 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. இது முந்தைய 20 ஆண்டுகளில் பெற்ற முதலீட்டில் ஏறக்குறைய பாதியளவு ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.