இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் – கோத்தபய ராஜபட்ச

இந்திய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது என்று அந்த நாட்டின் புதிய அதிபா் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.

நட்பு நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

சீனா, அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த இரு நாடுகளுக்கு இடையே நாங்கள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டா போட்டியில் தலையிட்டால் மிகவும் சிறிய நாடான இலங்கையால் தாக்குப் பிடிக்க முடியாது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே எங்களுக்கு சமம்தான். அந்த இரு நாடுகளுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.

சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ ஆதரவான நிலையைக் கடைப்பிடிக்காமல் நடுநிலை நாடாகத் திகழ்வோம்.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற இந்தியாவின் கவலையை நாங்கள் உணா்ந்துள்ளோம். எனவே, இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

உலக அரசியலில் இந்தியப் பெருங்கடல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, அந்தக் கடலின் வழித்தடங்களில எந்த நாடும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படாது.

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் யாவும் முழுக்க முழுக்க வா்த்தக ரீதியிலானவையே ஆகும். அதே போன்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா, சிங்கப்பூா், ஜப்பான், ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளையும் வரவேற்கிறேன்.

இங்கு சீனா மட்டுமல்ல, பிற நாடுகளும் தாராளமாக முதலீடு செய்யலாம்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட்டது, முந்தைய ஆட்சியாளா்கள் செய்த மிகப் பெரிய தவறாகும். அந்த குத்தகை ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இனவாதி இல்லை: விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது நான் இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன். ஆனால், உண்மையில் நான் இனவாதி கிடையாது என்றாா் கோத்தபய ராஜபட்ச.