இந்தியர்களின் நலனை காக்க சீனாவில் கடும் முயற்சி – ஜெய்சங்கர்

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். சீன அரசின் கணக்குப்படி 1,287 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 237 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸ் அதிகம் பாதிப்புள்ள வூஹான் நகரில் 250 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சீனாவில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அங்குள்ள சூழ்நிலை குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்திய தூதரகத்தை அணுகும்படி தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
இந்தியர்களின் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நமது இரண்டு ஹாட்லைன்களும் இயங்கி வருகிறது. இந்தியர்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டது.