ஆ.ராஜா காரை சோதனை செய்யாத அதிகாரி சஸ்பெண்ட்

 

தி.மு.க., எம்.பி., ஆ.ராஜாவின் காரை முறையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீலகிரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.பி., ராஜா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக ஊட்டிக்கு வந்திருந்தார். பின், ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க., மாவட்டச் செயலர் முபாரக் ஆகியோர் ஒரே காரில் உடன் சென்றுள்ளனர். அப்போது கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் அலுவலர் கீதா தலைமையில் போலீசார் ராஜா சென்ற வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். சோதனைக்கு பின் வாகனத்தில் ஏறி அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி., ராஜா மற்றும் மாவட்டச் செயலர் முபாரக் ஆகிய மூவரும் மேட்டுப்பாளையம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ‘ராஜா சென்ற வாகனத்தில் பல பெட்டிகள் இருந்த நிலையில் அவற்றை முழுமையாக சோதனையிடாமல் சில நிமிடங்களில் தேர்தல் அலுவலர்கள் சோதனை பணியை நிறைவு செய்து அனுப்பி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாநில தேர்தல் ஆணையம் வரை புகார் சென்றுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் விசாரணை நடந்தது. இந்நிலையில், காரை முறையாக சோதனையிடவில்லை எனக்கூறி, தேர்தல் அலுவலர் கீதாவை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.