ஆறுமுக நாவலர்

பழங்காலத்தில் இலக்கியங்கள் அனைத்தும் ஏட்டுச்சுவடிகளிலேயே இருந்தன. ஏட்டிலிருந்து அச்சுப் பதிப்பது அப்படி ஒன்றும் எளிய செயல் இல்லை. ஏட்டில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு எந்தப் பிழையும் இல்லாமல் அச்சில் பதிக்கும் அரிய பணியை மேற்கொண்ட பெரியவர்களாலேயே இன்றைக்குத் தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அத்தகைய அரிய பணியை ஆற்றிய முன்னோடிகளுள் முதன்மையானவர் ஆறுமுகநாவலர். தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்” என்று திரு.வி.க கூறியுள்ளார்.

இளமையிலேயே தமிழ், ஆங்கில, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் நன்கு புலமைபெற்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். கல்லூரி அதிபர் பெர்சிவல் பாதிரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஆனால், கிறிஸ்தவர்களின் மதமற்ற வெறியைக் கண்டு வெறுப்படைந்தார். தமது பணியை உதறித் தள்ளினார். திருமணம் செய்யாமல், பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

தமிழ் உரைநடை இவருக்கு முன் மிகக் கடினமாக எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது. ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தற்குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே. புதிதாக புத்தகவாசிப்பில் ஈடுபடுவோரை முன்னிலைப் படுத்தியே இலக்கணத்தையும் சைவசமயத்தையும் பற்றிய பல விளக்கநூல்களை எழுதிய சிறப்பு இவருக்கே உரியது. எனவே இவரை ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்று அறிஞர்கள் பாராட்டினர்.

சொற்பொழிவுத் துறையில் முன்னோடிகள் என்று போற்றப்படும் வ.உ.சி., திரு.வி.க., ஆகியோருக்கு நெடுநாட்கள் முன்னதாகவே இலங்கையிலும் தமிழகத்திலும் ஈடு இணையற்ற சொற்பொழிவாளராகத் திகழ்ந்த பெருமை நாவலருக்கே உரியது. இவரது பொழிவைக் கேட்ட பலர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர். அப்படி மாறிவந்தவர்களுள் கிங்ஸ்பரி என்னும் பெயரைக் கொன்டவரே பின்னாளில் சி.வை. தாமோதரம்பிள்ளை என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். பின்னர், நாவலரைப் போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார்.