ஆர்.எஸ்.எஸ். சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைப்பது ‘சமுதாயத்தில் ஒரு அமைப்பு’ மட்டும் மல்ல

துவங்கிய நாளிலிருந்தே சங்கம் தன்னை சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக கருதி வந்துள்ளது; சமுதாயத்தில் உள்ள ஒரு அமைப்பாக  மட்டும் அல்ல.  ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து தேசம் விடுபட்ட பின்னும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த நிலை மாறவில்லை. சுதந்திரம் பெற்ற  புதிதில், 1949ல் உருவாக்கப்பட்ட  ஆர்.எஸ்.எஸ் விதியமைப்பில்  ஸ்வயம்சேவகர்கள் விரும்பினால் அரசியலில் சேரலாம், எந்தக் கட்சியிலும் இணையலாம் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த விதியமைப்பு உருவாக்கப்பட்டது ஜனசங்கம் துவக்கப்படுதற்கு முன்பு.

ஜனசங்கம் செயல்படத் தொடங்கிய பிறகும் கூட பல ஸ்வயம்சேவகர்களும் பிரச்சாரகர்களும் ஜனசங்கத்திற்காக தீவிரமாகச் செயல்பட்டுக்  கொண்டிருந்தார்கள் என்ற போதிலும்   சங்க   விதியமைப்பில் உள்ள இந்த  ஷரத்து மாற்றப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு தேசம் ஜனநாயகத்தை தழுவியதால் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இருப்பது உறுதி. சங்கம் சமுதாயம் முழுவதற்குமான அமைப்பாக விளங்குவதால் சமுதாய வாழ்க்கையில் எந்த ஒரு துறையும் சங்க ஸ்பரிசம் படாமல் இருக்க முடியாது. தேசிய கண்ணோட்டம் உள்ளவர் என்ற முறையில் ஒரு ஸ்வயம்சேவகர், அரசியல் களம் உள்பட, தனது விருப்பத்திற்கு ஏற்றபடி சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும்   ஈடுபடுவது என்பது   இயல்புதான். சில ஸ்வயம்சேவகர்கள் அரசியலில் செயல்படுவதால் ஆர்.எஸ்.எஸ்ஸை அரசியல் அமைப்பு என்று சொல்வது சரியல்ல.

அரசியல் கட்சி (party) என்றால் அது ஒரு  part-க்காக செயல்படும். எனவே  மறு part ம் இருக்கும். முழு சமுதாயத்திற்காகவும் இருப்பது ஆர்.எஸ்.எஸ். சங்கமும் ஹிந்து சமுதாயமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. உணர்வு ரீதியாக அவை இரண்டும் ஒன்றியிருப்பவை. அப்படியிருக்க  ‘முழுமை‘ எப்படி ஒரு ‘பகுதி‘ ஆக முடியும்? இந்த பாகுபாட்டைப் புரிந்து கொள்வது முக்கியம்.

ஆர்.எஸ்.எஸ்ஸும் அரசியலும்

ஆர்.எஸ்.எஸ் 1925 ல் நிறுவப்பட்ட பிறகு 1930 ல் மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று   சங்க நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் சில ஸ்வயம்சேவகர்களுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். சத்தியாகிரகத்திற்குப் புறப்படுமுன் அவர் ஆர்.எஸ்.எஸ் தலைமைப் பொறுப்பை டாக்டர் பராஞ்சபேயிடம் ஒப்படைத்தார். தானும் தன்னுடன் வரும் ஸ்வயம்சேவகர்களும் தனிப்பட்ட முறையிலேயே சத்தியாகிரகத்தில் பங்கேற்பதை தெளிவுபடுத்தினார். அறப் போராட்டத்தில் அவர் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.

சுதந்திரம் கிடைத்த பிறகு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் காங்கிரஸ் கட்சியுடன் ஆர்.எஸ்.எஸ்ஸை இணைத்து விடுமாறு யோசனை சொன்னார். ஸ்ரீ குருஜி பணிவுடன் இந்த அழைப்பை நிராகரித்தார். சமுதாயம் முழுவதற்கும் தொண்டாற்றவே சங்கம் விழைகிறது என்றும் அது அரசியல் கட்சி அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி குருஜியை அணுகினார். சுத்தமான தேசியப் பார்வை கொண்ட ஒரு அரசியல் கட்சி அவசியம் என்பதால் சங்கம் அந்தத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று யோசனை சொன்னார். முகர்ஜியே முதல் அடி எடுத்து வைத்து வழிகாட்டுமாறு ஸ்ரீ குருஜி அறிவுறுத்தினார். தேவையான எல்லா உதவிகளையும் சங்கம் அளிக்கும் என்றும் கூறினார்.  சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கிற தனது பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவற்றையெல்லாம் உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டுமென்றால்  ஆர்.எஸ்.எஸ் முழு சமுதாயத்தின் அமைப்பு, சமுதாயத்தில் ஒரு அமைப்பு மட்டும் அல்ல  என்ற  கருத்தை உள்வாங்கிக் கொள்வது அவசியம்.

ஆண்டு 2018 ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில  பாரதிய பிரதிநிதி சபை (அகில இந்திய செயற்குழு)  கூட்டம்   நாகபுரியில் நடைபெற்றது.  சர்கார்யவாஹ் அழைப்பின் பேரில் மூத்த ஸ்வயம்சேவகர்  (1931 ல் தனது எட்டாவது வயதில் இருந்து    ஸ்வயம்சேவக்)  எம்.ஜி வைத்ய அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அன்றைய தினம் அவருக்கு 95 வயது நிரம்பி யிருந்தது. சர்சங்ககாலக் மோகன்ஜி பாகவத் அவரைப் பாராட்டி வாழ்த்தினார். ஏற்புரையில் எம்.ஜி வைத்ய, “சங்கத்தை புரிந்துகொள்வது சுலபம் அல்ல.  இரட்டையாக பிளவுபடுத்தும் மேற்கத்திய கண்ணோட்டத்தின் வாயிலாக அதை  புரிந்து கொள்ள முடியவே முடியாது.ஏகாத்ம தன்மை கொண்ட பாரதிய கண்ணோட்டத்தின் மூலமாகத்தான் எவரும் சங்கத்தை புரிந்து கொள்ள முடியும்”  என்று  கூறினார். ஈசாவாஸ்ய உபநிடதம் ஐந்தாவது செய்யுள், உயிருள்ளவற்றிலும் உயிரற்றவற்றிலும் எங்கும் வியாபித்திருக்கும் ஆன்மாவின் இயல்பை விவரிக்கையில் இவ்வாறு வர்ணனை தருகிறது:

    தத் யெஜதி தத் யெஜதி தத்வந்திகே

ததந்தரஸ்ய ஸர்வஸ்ய தது ஸர்வஸ்யஸ்ய பாஹ்யதஹ

(ஆன்மா அசைகிறது, அது அசைவதில்லை.  அது தொலைவில் உள்ளது,  வெகு  அருகில் உள்ளது.  அது அனைத்தின் உள்ளேயும் உள்ளது, அனைத்தின் வெளியேயும் உள்ளது). முரண்பாடு போலத் தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. சங்கத்திற்கும் இதே லாஜிக்  பொருந்தும்.

சமுதாயத்தின் அமைப்பு பல முகம் கொண்டது.  சமுதாயத்தில் சமய, கலாச்சார அமைப்புகள் உண்டு. மாணவர்களுக்கான தொழிலாளர்களுக்கான கல்வித்துறைக்கான அரசியலுக்கான சமயத்திற்கான அமைப்புகள் எல்லாம் உண்டு. சங்கம் சமுதாயம் முழுவதற்குமான அமைப்பானதால் சமுதாயத்தின் எந்த ஒரு அமைப்பும் சங்கத்தின் ஸ்பரிசம் படாமல் இருக்க இயலாது.  அந்த எல்லாவற்றிலும் ஸ்வயம்சேவகர்கள் மும்முரமாக  செயல்படுவார்கள். அதே சமயத்தில் சமுதாயத்திற்குள் ஒரு அமைப்பு   மட்டும் என்ற ரீதியில் சங்கம்   இருக்க இயலாது. இவை அனைத்துமாக சங்கம் இருந்தாலும் அதற்கும் மேலே ஏதோ கூடுதலாக சங்கத்தில் உள்ளது. சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அம்சமே அது.

 இதே போன்றதொரு விளக்கம் தருகிறது புருஷ சூக்தம்:

பூமிம் விஸ்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட தசாங்குலம்

(அது பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்த பின்னும் சற்று எஞ்சி உள்ளது)

அணு விஞ்ஞானிகள் முன்பெல்லாம் அணுவைப் பிளக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு அணுவை பிளக்கலாம் என்றும் அணுவுக்குள்  நியூட்ரான்,  புரோட்டான், எலக்ட்ரான் என்று  மூன்று துகள்கள் உண்டு என்றும் சொன்னார்கள். அதன் பிறகு  மூன்று துகள்கள் அல்ல,  பல   அணு உள்கூறுகள் உள்ளன என்று உணர்ந்தார்கள். அதையடுத்து இவையெல்லாம் துகள்கள் அல்ல இவற்றுக்கு அலை போன்ற தன்மை உண்டு என்றார்கள்.    பின்னர் இவையெல்லாம்  துகள்களோ அலைகளோ மட்டும் அல்ல இரண்டின் தன்மையும் கொண்டவை (dual  எனவே duarticle) என்று அழைத்தார்கள். பின்னர் ஹெய்சன்பெர்க், ஒரு பொருளின் இருப்பிடமும் அதன் வேக அதிகரிப்பும் ஒரே சமயத்தில் துல்லியமாக அளவிடப்பட முடியாது,  தியரி அளவிலும் கூட முடியாது என்றார். அது குவாண்டம் மெக்கானிக்சில்  சேரும்.  காரணம் குவாண்டம் பொருள் அனைத்தும் துகள் -அலை இணை. “இதையேதான் ஈசாவாஸ்ய உபநிடதம் விவரிக்கிறது. அதையும் பாரதிய ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தையும் (பிளவு கண்ணோட்டத்தை அல்ல) உள்வாங்கிக் கொண்டால் தான் ஒருவரால் சங்கத்தின் உண்மையான இயல்பைப் புரிந்து கொள்ள முடியும்” எம்.ஜி வைத்ய அன்று தெளிவுபடுத்தியது இவ்வாறு தான்.

சங்கம் சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பு; அரசியல் சமுதாயத்தின் ஒரு அம்சம்;  எனவே சில  ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தின் இந்தத் துறையில் செயல்படுவது உறுதி.

ஆனால் ஸ்வயம்சேவகர்களுக்கு அரசியல் மட்டுமே குறிக்கோள் அல்ல. தற்போது நாம் ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவான பொதுத் தேர்தலின் மத்தியில் இருப்பதால் ஸ்வயம்சேவகர்கள் பொதுஜன விழிப்புணர்வு இயக்கப் பணிகளில் ஈடுபட்டு மக்களை  வாக்களிக்க  ஊக்குவிப்பார்கள். அப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை வலியுறுத்துவார்களே அல்லாமல் உள்ளூர் விவகாரங்களை அல்ல.

குறிப்பிட்ட கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க கூடாது என்று சங்கத்தின் விதியமைப்பு  ஸ்வயம்சேவகர்களைத் தடுப்பதில்லை. இருந்தாலும் 90 சதவீத ஸ்வயம்சேவகர்கள் ஒரு அரசியல் கட்சிக்கோ ஒரு வேட்பாளருக்கோ வாக்கு சேகரிப்பது இல்லை  என்பது கவனிக்கத்தக்கது.   எனினும்  அவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த  பிரச்சினைகளை எழுப்பி விவாதிப்பார்கள். பல்வேறு மட்டங்களில் இத்தகைய ஈடுபாடு காட்டினாலும் சங்கம் எந்த ஒரு அரசியல் கட்சியின் அங்கமாகவோ அரசியல் கட்சியாகவோ இருக்க முடியாது.  சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பு சங்கம்.

பூரணத்துவம் வாய்ந்த பாரதிய கண்ணோட்டத்தையும் ஈசாவாஸ்ய உபநிடதக் கருத்தையும் உள்வாங்கிக் கொண்டால் இதை புரிந்து கொள்ளலாம்.