மண்

ம்தா பானர்ஜி எனக்கு வங்காளத்தின் சிறப்பு இனிப்பான  ரசகுல்லா அனுப்புவார் என்று பிரதமர் நரேந்திர  மோடி சொன்னாலும் சொன்னார், அவருக்கு பதிலடி கொடுக்கிற துடிப்பில்    மமதா பானர்ஜி, “இனிமேல் இனிப்பு அல்ல, மண்தான் அனுப்புவேன்” என்று உளறி வைத்தார்.  சற்றும் சளைக்காத மோடி, “ வங்காளத்து    மண் எவ்வளவு உயர்ந்தது! ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி போன்று எத்தனையோ மாமனிதர்களின் பாதம் பட்ட  மண் அல்லவா அது?”  என்று பண்பான  விதத்தில் சர்ச்சையை முடித்து வைத்தார்.  எப்படியோ,  எல்லோர் கண்ணிலும்  பட்டுவிட்டது மண். அனைவர்  கவனமும் மண்ணின் பால் சென்றது என்று சொல்ல வந்தேன்.

மோடிக்கு வங்காளத்தின் மண் புனிதமாகப் பட்டது.  மகான் அரவிந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் தவம் செய்த  பஞ்சவடி மண் புனிதமாகப்பட்டது.  ஒரு  சாக்பீஸ் பெட்டியில் பத்திரப்படுத்திய அந்த மண்ணை எடுத்து தனது தியானத்தின் போது அருகில் வைத்துக் கொள்வாராம்.  சுதந்திரப் போராட்ட  வேளையில்  அலிப்பூர் குண்டு  வெடிப்பு வழக்கு    தொடர்பாக அரவிந்தரை ஆங்கிலேய உளவுத் துறையினர் விசாரித்தபோது அவர்கள் கண்ணில்  இந்த மண் பட்டது.   அது வெடிமருந்து  அல்ல என்று அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் அரவிந்தருக்குப் போதும் போதும் என்று ஆகி இருக்கும்.

மண்ணில் புனிதம் பார்க்கிற  மரபு   பாரத பூமியின் எல்லாப் பகுதிகளிலும் உண்டு.  உத்தரப்  பிரதேசம்  லக்னோவில்  விடுதலை புரட்சி  வீரர் சந்திரசேகர ஆஜாத்  ஆல்பிரட் பூங்காவில்  தேசத்திற்காக பலிதானம் ஆன  இடத்தில் இருந்த மரத்தடி மண்ணை கும்பிடுவதற்காக மக்கள் எடுத்துச் சென்று  சந்திரசேகர்  ஆஜாதை குலசாமி  ஆக்கிவிடக்  கூடாது  என்பதற்காக அந்த மரத்தையே வேரும் வேரடி மண்ணும் இல்லா
மல் அப்புறப்படுத்தி விட்டார்களாம் ஆங்கிலேய புண்ணியவான்கள்.

வெள்ளைக்காரர்கள் பயந்தது சரிதான்.  அதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில்   வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி மண்ணை    வீட்டில்  பத்திரமாக  வைக்கும் பழக்கம் தென்பாண்டி மக்களுக்கு உண்டு.  நடுநிசியில் குழந்தை பயந்து அழுதால் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை திருநீறு போல நெற்றியில் இடுவார்கள்.  குழந்தை பயம் நீங்கி  தூங்கும்.

திருநீற்றுப் பிரசாதத்திற்கு பதிலாக  புற்றுமண் உருண்டைகளையே    பிரசாதமாக வழங்கும் பழக்கம்   சங்கரன்கோயில் கோமதி அம்மன்  ஆலயத்தில் உண்டு.  அங்கு  அதை மண் என்று சொல்வது இல்லை,  மருந்து என்கிறார்கள். சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலிலும்    விபூதி பிரசாதத்தில் மண் உருண்டைகள்.  கலந்திருக்கும் இங்கும் அது   மண்ணல்ல,  மருந்து தான்.   இறைவனே வைத்திய நாதன் தானே?

ஊரும் நாடும் மாசில்லாமல் இருந்த காலத்தில் கபடி ஆடும் சிறுவர்கள் முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டால்,  ஆடுகள மண்ணையே தெள்ளி,  காயத்தின் மேல் அப்பி விட்டு  தொடர்ந்து  விளையாடுவதுண்டு.   அவர்கள்  உடம்புக்கு ஒன்றும்  ஆகிவிடவில்லை.

 ஹிந்துக்களுக்கு தேசபக்தியும் தெய்வபக்தியும் ஒன்று.  எனவே  அவர்களுக்கு ’கல் எல்லாம் சிவலிங்கம் மண்ணெல்லாம் திருநீறு’. இப்படி மண்ணைப் போற்றுகிற மனப்பான்மை ’கங்கர் கங்கர் மே சங்கர் ஹை’ என்ற ஹிந்திப் பழமொழியிலும் பிரதிபலிக்கிறது.

அறுபதுகளின் பழனி திரைப்படத்தில் ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும் என்று தொடங்கும் பாடலில் “மண்ணிலே வைரம்  உண்டு தங்கம்  உண்டு  மணியும்   உண்டு”   என்று ஒரு வரி வரும்.  “மேரே தேஷ் கீ தரதீ ஸோனா உகலே, உகலே ஹீ்ரே மோத்தீ” என்ற ஹிந்தி திரைப்படப் பாடலின் வரி அசப்பில் பழனி பாடலின் இரட்டைப் பிறவி தான். உணர்வு நாடு முழுவதும் அப்படி ஒன்றுபோல விளங்குகிறது குறிப்பாக தேச பக்தி உணர்வு. காரணம் மண்ணிலிருந்து தேசபக்தி முளைவிடுவது பாரதம் முழுவதற்கும் பொதுவான பண்பு.   